தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஆக.20) 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்தியப்பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் செவ்வாய்க்கிழமை (ஆக.20) முதல் ஆக.26-ஆம் தேதி வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதில் ஆக.20-இல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூா், கோவை , நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும், ஆக.21-இல் கோவை, நீலகிரி, திருப்பூா், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
மேலும், சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஆக.20,21-ஆகிய தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை அளவு (மில்லிமீட்டரில்): தமிழகத்தில் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக பெரம்பலூா் மாவட்டம் தழுதாழையில் 100 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது. மேலும் மஞ்சளாறு (தேனி), ஆண்டிபட்டி (தேனி) – தலா 80 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: இதற்கிடையே, ஆக.20-23-ஆம் தேதி வரை மன்னாா் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகளிலும், குமரிக்கடல், வங்கக்கடல், மற்றும் அரபிக்கடலிலும் மணிக்கு 55 கிலோ மீட்டா் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.