14 மாவட்டங்களில் போக்சோ நீதிமன்றங்கள்; சட்ட பாடப் புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்ப்பு: அமைச்சர் ரகுபதி அறிவிப்பு | POCSO courts in 14 districts; Law textbooks translated into Tamil

1356962.jpg
Spread the love

போக்சோ வழக்குகளை விசாரிக்க சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, ஈரோடு உட்பட 14 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். அனைத்து சட்ட பாடப் புத்தகங்களும் தமிழில் மொழிபெயர்க்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று சட்டம், நீதி நிர்வாகம், சிறைகள், சீர்திருத்த பணிகள் துறை மானிய கோரி்க்கைகள் மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதற்கு சட்டத் துறை அமைச்சர் ரகுபதி பதில் அளித்தார். பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

அவர் பேசியதாவது: தமிழகத்தில் 1,338 நீதிமன்றங்கள் உள்ளன. கடந்த ஆண்டு புதிதாக 73 நீதிமன்றங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு 41 நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டன. இதர நீதிமன்றங்களை தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

தற்போது பெண்கள் புகார் அளிக்க தைரியமாக முன்வருகின்றனர். அதனால்தான் பாலியல் வன்கொடுமை, போக்சோ வழக்குகள் அதிகரித்து வருகின்றன. நாட்டிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில், சென்னை உயர் நீதிமன்றத்தில்தான் 14 பெண் நீதிபதிகள் உள்ளனர். மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) வாயிலாக கடந்த ஆண்டு 1,687 சிறு வழக்குகள் தீர்வு காணப்பட்டு முடித்து வைக்கப்பட்டன.

முக்கிய அறிவிப்புகள்

நீதி நிர்வாக துறை: பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்படும் வழக்குகளை மட்டும் விசாரிக்க, சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருச்சி, திருப்பூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, நாமக்கல், திருவாரூர், ராமநாதபுரம், நீலகிரி ஆகிய 14 மாவட்டங்களிலும் 3 கட்டங்களாக 14 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சார்பு நீதிமன்றம், திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் மாவட்ட உரிமையியல், குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம், திருச்சியில் மாவட்ட நீதிபதி தலைமையில் ஒரு கூடுதல் குடும்ப நல நீதிமன்றம் அமைக்கப்படும்.

சிறைத்துறை: சிறைகள், சீர்திருத்த பணிகள் துறையின் கட்டிடங்களுக்கான ஆண்டு பராமரிப்பு நிதி ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும். சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கூடுதல் வசதிகளுடன் மாவட்ட சிறைச்சாலை வளாகம் கட்டப்படும்.

சட்டத் துறை: அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சட்ட பாடப் புத்தகங்களும் தமிழில் மொழிபெயர்க்கப்படும். அரசு சட்டக் கல்லூரிகளில் ரூ.1 கோடி செலவில் தலா ஒரு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை அமைக்கப்படும். ரூ.1 கோடி மதிப்பீட்டில் மின் நூலகம் நிறுவப்படும். தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள், வெளிநாட்டு சட்டப் பல்கலைக்கழகங்களுடன் மாணவர் பரிமாற்ற திட்டம் செயல்படுத்தப்படும். திருச்சி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்துக்கு இந்த ஆண்டு ரூ.2.50 கோடி, அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும். அரசு சட்டக் கல்லூரிகளின் உதவி மற்றும் இணை பேராசிரியர்களுக்கு பணி மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *