முல்லை பெரியாறு அணை தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள மக்களின் முக்கிய குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான நீர் ஆதரமாக உள்ளது.
கேரளாவில் அணை அமைந்திருப்பதால், அதன் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக இரு மாநிலங்களிடையே பிரச்சனை இருந்து வருகிறது.
இதையடுத்து இரு மாநிலங்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது அணையின் உறுதி தன்மை குறித்து தெரிந்து கொள்வதற்காக 2011 ஆம் ஆண்டு ஆர்.ஒ.வி. மூலம் முல்லை பெரியாறு அணையில் மூழ்கி இருக்கும் பகுதிகளில் ஆய்வு நடந்தது.
இந்த ஆய்வில் அணையின் அடிப்பாகம் உறுதியாக இருப்பது தெரிய வந்ததது. இதையடுத்து 2014 ஆம் ஆண்டு அணையின் நீர்மட்டம் 142 அடி வரை உயர்த்தி கொள்ளலாம் என்றும், மேலும் பேபி அணையை பலப்படுத்திய பின் அணையின் முழு கொள்ளளவான 152 அடி வரை நீரை தேக்கி கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தொடர்ந்து தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அணில் ஜெயின் தலைமையில் ‘மத்திய கண்காணிப்பு குழு’ ஒன்றையும் அமைத்ததோடு, வருடந்தோறும் அணையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அக்குழுவிற்கு உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.