ஹைதராபாத்:
திருப்பதி கோவிலில் லட்டு சர்ச்சை எழுந்து உள்ள நிலையில் கடந்த 4 நாட்களில் 14 லட்சம் லட்டுகள் விற்பனையாகி இருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
லட்டு சர்ச்சை
திருப்பதி வெங்கடாசலபதி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம்செய்து செல்கிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் தவறாமல் பிரசாதமாக லட்டு வாங்கி செல்வது உண்டு. திருப்பதி லட்டுக்கு என்று தனி சுவை, மனம் உள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் லட்டுகளை அதிகம் வாங்கி உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பிரசாதமாக கொடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் முந்தைய ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய்யில் விலங்குகளின் கொழுப்பு இருப்பதாக முதல்மந்திர சந்திரபாபு நாயுடு திடீர் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து பெரும் சர்ச்சை எழுந்தது. இது தற்போது பூதாகரமாக பல்வேறு விமர்சனங்களாக மாறி உள்ளது. ஆந்திராவில் பெரிய அளவில் அரசியல் சலசலப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.இதற்கிடையே திருப்பதி கோவிலில் லட்டுசர்ச்சையில் புனிதத்தை மீட்க சிறப்பு வழிபாடு மற்றும் புனித நீரும் தெளிக்கப்பட்டது. ஆனால் இந்த லட்டு சர்ச்சை திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களை எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்த வில்லை.விலைமதிப்பற்ற லட்டு பிரசாதத்தினை பக்தர்கள் எந்த வித குழப்பமும் இன்றி வாங்கி செல்கிறார்கள்.
4 நாட்களில் 14 லட்சம் லட்டுகள்
லட்டு சர்ச்சை எழுந்து உள்ள நிலையில் கடந்த நான்கு நாட்களில் 14 லட்சம் திருப்பதி லட்டுகள் விற்பனையாகி இருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. செப்டம்பர் 19 ந்தேதி அன்று மொத்தம் 3.59 லட்சம் லட்டுகளும், செப்டம்பர் 20ந்தேதி அன்று 3.17 லட்சமும், செப்டம்பர் 21 ந்தேதி அன்று 3.67 லட்சமும், செப்டம்பர் 22 ந்தேதி அன்று 3.60 லட்சமும் விற்பனையாகி உள்ளன. தினசரி சராசரியாக 3.50 லட்சம் லட்டுகள் விற்பனையாகி வருகின்றன.
இதுகுறித்து திருப்பதிக்கு வந்த பக்தர்கள் கூறும்போது “எங்கள் நம்பிக்கை அசைக்க முடியாத அளவுக்கு வலுவாக உள்ளது” என்று பதிலளித்து உள்ளனர். திருப்பதி கோவிலில் தினமும் கோவிலில் தினமும் சுமார் 4 லட்சம் லட்டுகள் தயாராகின்றன.
இந்த தி லட்டுவில் உயர்ந்த தரத்திலான வங்காளப் பருப்பு, பசு நெய், சர்க்கரை, முந்திரி, திராட்சை, பாதாம் ஆகியவை சேர்க்கப்படுகின்றன. லட்டு தயாரிக்க தினமும் 15 ஆயிரம் கிலோ பசு நெய் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.