சென்னை: தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 1,483 கிராம ஊராட்சி செயலர் பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று ஊரக வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்ட அளவில் கிராம ஊராட்சி செயலர் பதவியில் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அனைத்து மாவட்டங்களையும் சேர்த்து மொத்த காலி இடங்கள் 1,483 ஆகும். இந்த பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 8-ம் வகுப்பு வரை தமிழ் மொழியை படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 32 வரை. பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி வகுப்பினருக்கு வயது வரம்பு 34, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 37 ஆகநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டு தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் ரூ.100. எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.50. உரிய வயது, கல்வித் தகுதி உடையவர்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக நவ.9-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட வாரியாக காலியிடவிவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.