"15 தொகுதிகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளோம்"- செளராஷ்டிரா அரசியல் ஒருங்கிணைப்புக்குழு

Spread the love

வரும் சட்டமன்றத் தேர்தலில் தங்கள் ஆதரவு யாருக்கு என்று அறிவிப்பதற்காக செளராஷ்ட்ர அரசியல் ஒருங்கிணைப்புக் குழு (SPAC) மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் வருகின்ற டிசம்பர் 28 அன்று அரசியல் எழுச்சி மாநாடு நடத்துகிறது.

மாநாட்டுப் பணிகள் தொடக்கம்
மாநாட்டுப் பணிகள் தொடக்கம்

அதை முன்னிட்டு மாநாட்டுக்கான வலைதளம், மாநாட்டுக்கான செளராஷ்டிர மொழி பாடல் வெளியீடு மற்றும் ஆட்டோ விளம்பரங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசிய செளராஷ்ட்ர அரசியல் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி கே.ஆர்.எம் கிஷோர்குமார், “தமிழகத்தில் 15 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக சௌராஷ்டிரா சமூகத்தினர் இருந்து வருகிறார்கள். அப்படியிருந்தும் ஓர் இடத்தில்கூட பிரதிநிதித்துவம் இல்லை.

மதுரையில் மட்டும் இரண்டு லட்சம் சௌராஷ்டிரா வாக்காளர்கள் உள்ளனர். மதுரை தெற்குத் தொகுதியில் 40 ஆயிரம் பேர், திருப்பரங்குன்றத்தில் 80 ஆயிரம் பேர் உள்ளனர். ஆனால், ஒரு வார்டில் கூட சௌராஷ்டிரா சமூக கவுன்சிலர் இல்லாதது அவமானமாக உள்ளது.

அரசியல் கட்சிகள் போதுமான பிரதிநிதித்துவம் கொடுக்காததாலும், சௌராஷ்டிரா சமுதாயத்தில் ஒற்றுமை இல்லாததாலும் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. அந்த ஒற்றுமையின்மையைப் போக்கத்தான் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

2026 சட்டமன்றத் தேர்தலில் மதுரை தெற்கு, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் அனைத்துக் கட்சிகளும் சௌராஷ்டிரா வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அப்படி நிறுத்தும்பட்சத்தில் யார் வெற்றி பெற வேண்டுமென்பதை நாங்கள் கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம்” என்றார்.

செளராஷ்டிரா அரசியல் ஒருங்கிணைப்புக் குழுவுடன் கே.ஆர்.எம் கிஷோர்குமார்,
செளராஷ்டிரா அரசியல் ஒருங்கிணைப்புக் குழுவுடன் கே.ஆர்.எம் கிஷோர்குமார்,

இந்த நிகழ்வில் மாநாட்டுத் தலைவர் தினேஷ், செயலாளர் பிரசாந்த் ஷர்மிளா பிரகாஷ், மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், இணைச்செயலாளர்கள் வி.வி.சுரேஷ், பி.எம்.முரளி, இளைஞர் அணிச் செயலாளர் அறம் உதயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் வெளிமாவட்டச் சௌராஷ்டிரா அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *