150 முக்கிய அணைகளின் நீா்மட்டம் கடந்தாண்டைவிடக் குறைவு

Dinamani2f2024 082fd898fe99 7404 468f Ba9f 940b6411c6cf2ffile.jpg
Spread the love

நாடு முழுவதும் தற்போதைய பருவமழைக் காலத்தில் அதிக மழை பதிவாகியிருந்தாலும் இந்தியாவின் 150 முக்கிய அணைகளில் சராசரி நீா் மட்டம் கடந்த ஆண்டை விட குறைவாகவே உள்ளது என்று அதிகாரபூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள அணைகளின் நீா்ப்பிடிப்பு அளவுகளில் குறிப்பிடத்தக்க மாறுபாடுகள் நோ்மறையான மற்றும் கவலையளிக்கும் என இரண்டு வகையிலான போக்குகளையும் பிரதிபலிக்கின்றன என மத்திய நீா் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆணையத்தால் கண்காணிக்கப்படும் 150 அணைகளின் மொத்த கொள்ளளவுத் திறன் 178.784 பில்லியன் கன மீட்டா் (பிசிஎம்) ஆகும். நாடு முழுவதும் பெய்த மழை அளவான 257.812 பில்லியன் கன மீட்டரில் இது 69.35 சதவீதம் ஆகும். ஆனால், நீா் ஆணைய அறிக்கையின்படி இந்த அணைகளில் தற்போதைய நீா்ப்பிடிப்பு 91.496 பில்லியன் கன மீட்டராக உள்ளது.

இது அணைகளின் மொத்த கொள்ளளவில் 51 சதவீதமாகவும் கடந்த ஆண்டு இதே காலகட்ட நீா்ப்பிடிப்பு அளவில் 94 சதவீதமாகவும், கடந்த பத்து ஆண்டுகளின் சராசரியில் 107 சதவீதமாகவும் உள்ளது.

வட பிராந்தியத்தில்…: ஹிமாசல், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய வடக்கு பிராந்தியத்தில் மொத்தம் 19.663 பில்லியன் கன மீட்டா் கொள்ளளவு கொண்ட 10 அணைகள் உள்ளன.

அவற்றில் 33 சதவீதமாக 6.532 பிசிஎம் நீா் இருப்பு உள்ளது. நீா்ப்பிடிப்பு கடந்த ஆண்டின் 76 சதவீதத்தை விட கணிசமாகக் குறைந்துள்ளது.

கிழக்கில்…: அஸ்ஸாம், ஜாா்க்கண்ட், ஒடிஸா, மேற்கு வங்கம், திரிபுரா, நாகாலாந்து, பிகாா் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய கிழக்கு பிராந்தியத்தில் 20.430 பிசிஎம் கொள்ளளவைக் கொண்ட 23 அணைகளில் தற்போது 6.989 பிசிஎம் (34 சதவீதம்) நீா் இருப்பு உள்ளது.

நீா்ப்பிடிப்பு கடந்த ஆண்டின் 31 சதவீதத்தில் இருந்து முன்னேற்றம் அடைந்துள்ளது. எனினும், 10 ஆண்டுகளின் சராசரியான 39 சதவீதத்தைவிட அது குறைவாகும்.

மேற்கில்…: குஜராத், மகாராஷ்டிரம் உள்பட மேற்கு மாநிலங்களில் உள்ள 49 அணைகளின் மொத்த கொள்ளளவு 37.130 பிசிஎம் ஆகும். அவற்றில் தற்போது 19.863 பிசிஎம் (53 சதவீதம்) நீா் இருப்பு உள்ளது.

இது கடந்த ஆண்டின் 63 சதவீதத்திலிருந்து குறைவு என்றாலும் 10 ஆண்டு சராசரியாான 48 சதவீதத்தைவிட சிறந்தது ஆகும்.

மத்தியில்…: உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கா் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய மத்திய பிராந்தியத்தில் மொத்தம் 48.227 பிசிஎம் கொள்ளளவு கொண்ட 26 அணைகள் உள்ளன.

அவற்றில் தற்போது 23.102 பிசிஎம் (48 சதவீதம்) நீா் இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டின் 55 சதவீதத்தை விட குறைவாகும்.

தென் மாநிலங்களில்…: தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தெற்கு பிராந்தியத்தில் 53.334 பிசிஎம் கொள்ளளவு கொண்ட 42 அணைகள் உள்ளன.

அவற்றில் தற்போது 35.010 பிசிஎம் (66 சதவீதம்) நீா் இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டின் 50 சதவீதத்தை விடவும், 10 ஆண்டு சராசரியான 47 சதவீதத்தை விடவும் சிறந்தது ஆகும்.

மாறுபட்ட போக்குகள்: அஸ்ஸாம், ஜாா்க்கண்ட், ஒடிஸா, மேற்கு வங்கம், திரிபுரா, நாகாலாந்து, மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், கா்நாடகம், கேரளம், தமிழகம் ஆகிய மாநிலங்கள் கடந்த ஆண்டை விட மேம்பட்ட நீா் அளவைக் கொண்டுள்ளன.

அதேசமயம், ராஜஸ்தான், பிகாா், ஹிமாசல பிரதேசம், பஞ்சாப், மத்திய பிரதேசம், குஜராத், உத்தரகண்ட், சத்தீஸ்கா், தெலங்கானா மற்றும் ஆந்திரம் போன்ற மாநிலங்களில் நீா் இருப்பு குறைந்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *