நடிகை ராஷ்மிகா மந்தன்னாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கடந்த 26 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பிரமாண்டமாகத் திருமணம் செய்து கொண்டனர்.
இத்திருமணம் தெலுங்கு மற்றும் கன்னட முறைப்படி நடந்தது. புதுமணத் தம்பதி தங்களது மகிழ்ச்சியை ரசிகர்களோடு சேர்ந்து கொண்டாட முடிவு செய்துள்ளனர்.
இதற்காக புதுமணத் தம்பதி நாடு முழுவதும் 22 நகரங்களில் வசிக்கும் ரசிகர்களுக்கு இனிப்புகளை அனுப்பி இருக்கின்றனர். அவர்கள் லாரிகளில் ஐதராபாத், மும்பை, சென்னை, டெல்லி, பெங்களூரு, அகமதாபாத் போன்ற 22 நகரங்களுக்கு இனிப்புகளை அனுப்பி இருக்கின்றனர்.
அது மட்டுமல்லாமல் நாடு முழுவதும் இருக்கும் பிரபலமான 16 கோயில்களில் அன்னதானம் போடவும் ஏற்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பாக இருவரும் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘இந்த நாட்டின் அழகான மக்களாகிய நீங்கள் எப்போதும் எங்கள் பயணங்களிலும், எங்கள் அன்பிலும் ஒரு அங்கமாக இருந்து வருகிறீர்கள். எங்கள் திருமணத்தை உங்கள் அனைவருடனும் கொண்டாடுவது எங்களுக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியை அளிக்கும்.
இந்தியா எதையுமே இனிப்புகளுடனும் உணவுடனும்தான் கொண்டாடும். எனவே, மார்ச் 1-ஆம் தேதி, எங்கள் வாழ்வின் இந்தப் பெரிய தருணத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்வதற்காக, நாடு முழுவதும் அன்பு மற்றும் இனிப்புகள் நிறைந்த லாரிகளை நாங்கள் அனுப்பி வைக்கிறோம்.
மேலும், நாடு முழுவதும் உள்ள பல கோயில்களில் அன்னதானம் வழங்க உள்ளோம். உங்கள் அனைவரின் ஆசிகளையும் நாடுகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
சினிமா துறையைச் சேர்ந்த நண்பர்களுக்காக வரும் 4ம் தேதி ஐதராபாத்தில் இத்தம்பதி பிரமாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்து இருக்கின்றனர்.