மிகுந்த எதிர்பார்ப்புகளிடையே தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியாகின.
தாரமங்கலம் தொகுதியில் 19 வாக்குகள், திருமயம் தொகுதி 57 வாக்குகள், உதகமண்டலம் 129 வாக்குகள், கூடலூர் தொகுதி 129 வாக்குகள், மேலூர் தொகுதி 156 வாக்குகள், நாகர்கோவில் தொகுதி 193 வாக்குகள், நாங்குநேரி தொகுதி 204 வாக்குகள், காரைக்குடி தொகுதி 240 வாக்குகள், சங்கரன்கோவில் தொகுதி 337 வாக்குகள், கோவில்பட்டி தொகுதி 397 வாக்குகள், திருப்பத்தூர் தொகுதி 341 வாக்குகள், ஆத்தூர் தொகுதி 347 வாக்குகள், தாம்பரம் தொகுதி 426 வாக்குகள் என்று 103 தொகுதிகளில் வெற்றி தோல்வியைத் தீர்மானித்த வாக்கு வித்தியாசம், வெறும் ஐயாயிரம் வாக்குகளுக்கு குறைவாகவே இருந்தன.

முதன்முதலாக சட்டமன்ற பொதுத்தேர்தலை எதிர்கொண்ட எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக, 30.37 சதவீத வாக்குகளைப் பெற்று, 130 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது.
ஆளுங்கட்சியாக இருந்து கலைக்கப்பட்ட கருணாநிதி தலைமையிலான திமுக 24.89 சதவீத வாக்குகளைப் பெற்றாலும் 48 இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது.
ஜனதா கட்சிக்கு 10 இடங்கள் கிடைத்தன (16.66% வாக்குகள்), தேசியக் கட்சியான காங்கிரஸ் 27 இடங்களை மட்டுமே பிடித்து, 17.51 சதவீத வாக்குகளுடன் மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டது. அன்று முதல் இன்று வரை தமிழக அரசியல் வரலாற்றில் திமுக, அதிமுக இரு கட்சிகளின் கூட்டணியே முதல் இரண்டு இடங்களை வெல்ல முடிகிறது.
இந்திய விடுதலைக்குப் பின்னர், தமிழ்நாட்டு அரசியலில், தேசியக் கட்சியான காங்கிரஸும், திராவிடக் கட்சியான திமுகவும் எதிரும் புதிருமாக இருந்த நிலையை மாற்றி அமைத்தது 1977 சட்டமன்ற பொதுத் தேர்தல். 1952 தேர்தல் முதல் தேசியக் கட்சிகளின் ஆதிக்கத்தில் இருந்த தேர்தல் களம் 1977 தேர்தலுக்குப் பின்னர் மாநிலக் கட்சிகளின் வசம் வந்தது.
இந்தியாவிற்கு விடுதலை வாங்கித் தந்தோம் என்று பெருமை பாராட்டிய இந்திய தேசிய காங்கிரஸ், தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு திராவிடக் கட்சியின் முதுகில் ஏறி சவாரி செய்துதான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற நிலை உருவானது.
(தொடரும்)