காலமுறை ஊதியம், பதவி உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே 10வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அவர்களுக்கு அதிமுக, தவெக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் நேரடியாக சென்று ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று கோவை வந்தார்.
காலை சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களின் போராட்ட களத்திற்கு சென்று அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர்களின் கோரிக்கைகளை நயினார் கேட்டறிந்தார். போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள், “மத்திய மற்றும் மாநில அரசு இரண்டும் சேர்ந்துதான் நிதி ஒதுக்குகிறார்கள்.

மாநில அரசு தான் எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற மறுக்கிறார்கள். மத்திய அரசாவது எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.
மேலும், “மாநில அரசிடம் கேட்டால், மத்திய அரசைக் கேளுங்கள் என்கிறார்கள். மத்திய அரசிடம் கேட்டால், மாநில அரசைக் கேளுங்கள் என்கிறார்கள். எங்களை இப்படி இரண்டு அரசுகளும் அலைக்கழித்தால் நாங்கள் எங்கு செல்வது” என்று அங்கன்வாடி ஊழியர்கள் அவரிடம் வேதனை தெரிவித்துள்ளனர்.

அதிர்ச்சியடைந்த நயினார் நாகேந்திரன், “உங்களுக்கு தேர்தல் வாக்குறுதி அளித்தது திமுக அரசு தான். நீங்கள் அவர்களிடம் தான் முறையிட வேண்டும். நாங்கள் சொன்னதை செய்வோம். இது குறித்து வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசுகிறோம்” என்றார்.