திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே உள்ள கோபாலபுரம் ஊராட்சி பகுதியில் இருளர் இன மக்களுக்காக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் சமுதாய கழிவறை கட்டப்பட்டுள்ளது. இந்த கழிவறை கட்டி முடிக்கப்பட்டு, 2 ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால், இருளர் இன மக்கள் பல்வேறு இன்னலுக் குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு தெரிவித்ததாவது: கோபாலபுரம் ஊராட்சி பகுதியில் உள்ள குளத்து புறம்போக்கு பகுதியில் சுமார் 20 இருளர் இன குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வந்தனர். இந்நிலையில், இம்மக்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, கோபாலபுரம் கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில் சாலை வசதி இல்லாத பகுதியில் அரசு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கியது.
அந்த வீட்டுமனைகளில் குடிசை வீடுகள் அமைத்து இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், தங்கள் குடிசை வீடுகளில் கழிவறை வசதி இல்லாததால், வயல்வெளிகளில் இயற்கை உபாதைகளை கழித்து வருகின்றனர். இதனால் இருளர் இன பெண்கள் பல்வேறு இன்னலுக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சமுதாய கழிவறை கோரி ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் தொடர் கோரிக்கை வைத்து வந்தனர்.
அதன் விளைவாக, 2022-23-ம் நிதியாண்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ஆதி திராவிட நல திட்டம் மற்றும் பிரதம மந்திரி முன்னோடி கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் 6.50 லட்சம் மதிப்பில் சமுதாய கழிவறை கட்டப்பட்டது. ஆனால், இந்த கழிவறை கட்டப்பட்டு 2 ஆண்டுகளாகியும் இதுவரை திறக்கப்படவில்லை.
மாறாக, இருளர் இன மக்களுக்காக தொகுப்பு வீடுகள் அமைக்கும் பணிக்கு தேவையான சிமெண்ட் மூட்டைகள் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்காக பயன்படுத்தி வருகிறார், தொகுப்பு வீடுகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் ஒப்பந்ததாரர். இதனால், சமுதாய கழிவறை கட்டப்பட்டும் அதனை பயன்படுத்த முடியாத நிலைக்கு இருளர் இன மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.