2 ஆண்டுகளில் உயர் கல்வியில் சேராத 2.82 லட்சம் மாணவர்கள் – கல்லூரிகளில் 100% சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை | 2.82 lakh students who did not enroll in higher education in 2 years – TN govt action to get 100% admission in colleges

1305798.jpg
Spread the love

சென்னை: தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் உயர்கல்வியில் சேராத 2.82 லட்சம் மாணவர்களை, நான் முதல்வன் உயர்வுக்குப்படி திட்டம் மூலம் கல்வி நிறுவனங்களில் 100 சதவீத சேர்க்கையை உறுதி செய்யவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச்செயலர் நா.முருகானந்தம் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, ஆட்சியர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: “தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுக்கு செல்லாமல் தோல்வியடைந்த, அல்லது தேர்ச்சி பெற்று உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவ, மாணவியருக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்குப்படி-2024 என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கடந்த 2023 மற்றும் 24 ஆண்டுகளில் 2.47 லட்சம் மாணவர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கவோ, சரியான தகவல்களை தரவோ இல்லை. இவர்களின் உயர்கல்வியை உறுதி செய்ய, அனைத்து மாவட்டங்களிலும் 94 வட்டாரங்களில் நான் முதல்வன் உயர்வுக்குப்படி என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்.

பொதுவாக, கல்லூரிகளில் சேர முடியாததற்கு, உயர் கல்வி பற்றிய சரியான தகவல் கிடைக்காதது, திருமணம், வேலை அல்லது இவற்றுக்கு திட்டமிடுவது, பெற்றோரின் விருப்பமின்மை காரணமாக இருக்கலாம். இதுதவிர உடல் நலன் பாதிப்பு, சிறப்பு கவனம் தேவைப்படுவது, கல்வி இடத்தின் தூரம், கல்லூரி செல்ல பயம், பெற்றோர், பாதுகாவலர் இல்லாமை, கட்டணம் செலுத்த முடியாதது, விரும்பிய பாடப்பிரிவு கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களும் இருக்கலாம்.

இந்த காரணங்கள் இருந்தால், அவர்களுக்கு மாற்று வாய்ப்புகள் இருப்பதை தெரிவித்து, தடைகளை மாற்ற வேண்டும். வங்கிக்கடன், வேலை செய்து கொண்டே படிக்கும் வசதிகள், உதவித்தொகை உள்ளிட்ட வாய்ப்புகள் குறித்து தெரிவிக்க வேண்டும். இத்திட்டத்தை செயல்படுத்த, மாவட்ட ஆட்சியர் அரசு அலுவலர்களை ஒருங்கிணைக்க வேண்டும். சார் ஆட்சியர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலரை பொறுப்பு அதிகாரியாக நியமிக்க வேண்டும். முகாம்கள் நடத்தி, அவர்களுக்கு தேவையான சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கடந்த 3 ஆண்டுகளில், பள்ளி, கல்லூரி இடை நின்றவர்கள், தேர்ச்சி பெற்ற பின்பும் உயர்கல்வியில் சேராதவர்கள் பற்றிய தகவல்களை சேகரிக்க வேண்டும். நிரப்பப்படாத காலியிடங்களை கண்டறிந்து அவர்களை 100 சதவீதம் உயர்கல்வியில் சேர்வதை உறுதி செய்ய வேண்டும். இதற்கு பிறகும் உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்கு குறுகியகால திறன் பயிற்சி, பள்ளிக்கல்வியை முடிப்பது ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு உதவித்தொகை, தங்குமிடம் கிடைப்பதையும் உறுதிசெய்ய வேண்டும். 3 கட்ட முகாம்கள் நடத்தி அனைத்து அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளும் பங்கேற்க செய்ய வேண்டும். இதுதவிர, பொறுப்பு அதிகாரிகள் தங்களுக்கு வகுக்கப்பட்டுள்ள பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆட்சியர்கள் முகாம்களை தொடங்கி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று உயர்வுக்குப்படி முகாம் தொடர்பான விவரங்களையும், உயர்கல்வியில் சேருவதற்கான விழிப்புணர்வு, வழிகாட்டுதல்களையும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக உயர்கல்வி வழிகாட்டி குழு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோர் மாணவர்களின் இல்லங்களுக்குச் சென்று வழிகாட்டுதல்களை வழங்கவுள்ளனர்,” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *