+2 தேர்வுகள் தொடங்கிவிட்டன. ஆசிரியர்கள், ஊடகங்கள், இன்ஃபுளூயன்சர்கள், ஏ.ஐ சாட்பாட் என அனைவரும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிவருகிறார்கள். ஆனால், இந்த நேரத்தில் உண்மையிலேயே யாருக்கு அறிவுரை மற்றும் ஆறுதல் தேவை என்று பார்த்தால், பாவம் பெற்றோராகிய உங்களுக்குத்தான்!
மாணவர்கள் கூட தேர்வு அறைக்குள் போய் கேள்வியைப் பார்த்தவுடன் “எது நடந்தாலும் நடக்கட்டும்” என தியான நிலைக்குச் சென்றுவிடுவார்கள். ஆனால் தேர்வு மையத்திற்கு வெளியே இருக்கும் பெற்றோர் படும் பாடு இருக்கிறதே… அதைச் சொல்லி மாளாது!

-
தேர்வு தொடங்கிவிட்டால் போதும், வீட்டின் டிவி கேபிள் வயர்கள் மாயமாகிவிடும். செல்போன்கள் சைலன்ட் மோடுக்குச் செல்லும். குக்கர் விசில் சத்தம் கூட வராமல் அம்மாக்கள் சமையலறையில் ரகசிய போலீஸ் போல சமைப்பார்கள். “ஷ்… சத்தம் போடாதீர்கள் மகன் (அ) மகள் படிக்கிறார்” என்பதுதான் வீட்டின் தேசிய கீதமாக இருக்கும்.
-
நள்ளிரவில் இரண்டு மணிக்கு எழுந்து, பிள்ளை அறையில் லைட் எரிகிறதா என்று கதவிடுக்கில் எட்டிப் பார்ப்பார்கள். ஒருவேளை பிள்ளை தூங்கிக்கொண்டிருந்தால், “இந்த நேரத்துல தூங்குனா எப்போ படிக்கிறது?” என பதறுவார்கள். விழித்திருந்தால், “இன்னும் தூங்கலையா கண்ணு? உடம்பு கெட்டுடும்” என பரிதவிப்பார்கள்.
-
இத்தனை நாட்கள் சாப்பிடாத ஆரோக்கிய உணவுகள் எல்லாம் இந்த ஒரு மாதத்தில் பிள்ளைகளின் தொண்டைக்குள் திணிக்கப்படும். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை பாதாம், பிஸ்தா, பால், சுண்டல் என்று விழிந்திருந்து படிப்பதற்காகக் கொடுத்து மூச்சுத்திணற வைப்பார்கள்.
-
நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் நூறு முறையாவது “எல்லாத்தையும் படிச்சிட்டியா? ரிவைஸ் பண்ணிட்டியா?” என்ற கேள்வியை ரீப்பீட் மோடில் கேட்பார்கள்.

உண்மையைச் சொல்லப்போனால், பிள்ளைகளை விட பெற்றோர்தான் தேர்வு நேரத்தில் அதிக மன அழுத்தத்தில் இருப்பார்கள். பெற்றோரே… நியாயமாரே… உங்கள் அக்கறை புரிகிறது. ஆனால் உங்கள் பதற்றம் பிள்ளைகளையும் தொற்றிக்கொள்ளும். ஆகவே,
நீங்கள் கூலாக இருக்க சில ஆலோசனைகள்:
1. இது அவர்கள் தேர்வு, உங்கள் தேர்வு அல்ல!
முதலில் உங்களின் பிபி-யை (BP) குறைத்து, ஆழமாக மூச்சு விடுங்கள். பன்னிரண்டாம் வகுப்பு என்பது ஒரு முக்கியமான மைல்கல் தான், ஆனால் அதுவே வாழ்க்கையின் இறுதிப் போர் அல்ல. நீங்கள் உங்கள் காலேஜ், வேலை என அனைத்தையும் பார்த்துவிட்டீர்கள். இப்போது பேனாவை அவர்கள் கையில் கொடுத்துவிட்டு நீங்கள் வேடிக்கை மட்டும் பாருங்கள்.
2. இயல்பான சூழ்நிலையை உருவாக்குங்கள்
வீட்டை ஒரு ராணுவ முகாம் போல மாற்றுவதை நிறுத்துங்கள். வீட்டில் எப்போதும் போல இருங்கள். ஹெட்போன் போட்டுக்கொண்டு உங்களுக்குப் பிடித்த காமெடி படங்களைப் பாருங்கள், உங்களுக்குள் மெதுவாகச் சிரித்துப் பேசுங்கள். வீட்டின் சூழல் கலகலப்பாக இருந்தால் பிள்ளைகளுக்கும் டென்ஷன் குறையும்.

3. மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள்
“பக்கத்து வீட்டு பையன் காலையில 4 மணிக்கே எழுந்து படிக்கிறான், நீ என்னடான்னா இப்ப தூங்குற” என்ற டயலாக்கை மூட்டை கட்டி வையுங்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்திறன் உண்டு. பக்கத்து வீட்டு பிள்ளைகள், உங்கள் பிள்ளையாக முடியாது.
4. உணவில் அளவு தேவை
பிள்ளைகளுக்கு சத்தான உணவு தேவைதான், அதற்காக அவர்களை `மகாபலிபுரம் சிற்பம்’ செதுக்குவது போல உணவை வைத்து செதுக்க வேண்டாம். அவர்களுக்குப் பிடித்த, எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுகளை மட்டும் அளவாகக் கொடுங்கள்.
5. நம்புங்கள், உடன் இருங்கள்
அவர்கள் எவ்வளவு படித்துள்ளார்கள் என்பதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். தேர்வு எழுதச் செல்லும்போது புன்னகையுடன் வழியனுப்பி வையுங்கள். “உன்னால் முடியும், மார்க் பத்தி கவலைப்படாதே, போய் நல்லா எழுதிட்டு வா” என்ற ஒற்றை வார்த்தை அவர்களுக்கு அதிக எனர்ஜியைக் கொடுக்கும்.

இறுதியாக, பெற்றோரே! பிள்ளைகளின் பதற்றத்தைக் குறைத்து, பிடித்ததைச் சமைத்துக் கொடுத்து, ஒரு மெல்லிய புன்னகையோடு தேர்வுக்கு அனுப்பி வையுங்கள். “எவ்வளவு மதிப்பெண் எடுத்தாலும், நீ எங்களுக்கு எப்போதும் ஸ்பெஷல்தான்” என்பதை சொல்லுங்கள். இந்தத் தேர்வு அவர்கள் அறிவைச் சோதிக்கத்தானே தவிர, உங்கள் அன்பைச் சோதிக்க அல்ல.
பெற்றோர் அனைவருக்கும் `ஆல் தி பெஸ்ட்’!