திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் உள்பட இந்தியாவில் உள்ள 56 மத்திய பல்கலைக்கழகங்கள், 40 மாநில பல்கலைக்கழகங்கள், இந்தியா முழுவதுமுள்ள பல தனியார், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் CUET UG தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (26.02.2026) கடைசி நாளாகும்.

புதியக் கல்விக்கொள்கைப்படி உருவாக்கப்பட்ட CUET UG தேர்வு மூலமாகவே அனைத்து கல்வி நிறுவனங்களின் உயர்கல்விச் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. பா.ஜ.க ஆளும் பெரும்பாலான மாநிலங்கள் இந்த நுழைவுத்தேர்வு அடிப்படையிலேயே தங்கள் மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தி வருகின்றன. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் இந்தத் தேர்வை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியாவிலிருக்கும் பெரும்பாலான மத்திய அரசு நிறுவனங்கள் இந்த நுழைவுத்தேர்வு அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடத்துகின்றன. தமிழக மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதுவதன் மூலம் அந்தக் கல்வி நிறுவனங்களில் சேரமுடியும். தவிர திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்திலும் சேர முடியும்.
டிசைன் & ஃபேஷன் தொழில்நுட்பம் சார்ந்த பல படிப்புகளை வழங்கும் Footwear Design and Development Institute (FDDI), இந்தியா முழுவதுள்ள பல வேளாண் கல்லூரிகள் மூலம் வேளாண்மை மற்றும் அது தொடர்புடைய அறிவியல் பாடங்களை வழங்கும் Indian Council of Agricultural Research (ICAR), குற்றவியல் அறிவியல் (Forensic Science) சார்ந்த சிறப்புப் படிப்புகளை வழங்கும் National Forensic Sciences University (NFSU), உணவு தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை சார்ந்த படிப்புகளை வழங்கும் National Institute of Food Technology Entrepreneurship and Management, Kundli, Indian Institute of Tourism & Travel Management உள்ளிட்ட பல நிறுவனங்கள் CUET UG தேர்வு அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடத்துகின்றன.