2-ம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள்: உயர் நீதிமன்றத்தில் அரசு உறுதி | Metro stations will be constructed with facilities for disabled people: TN govt

1273338.jpg
Spread the love

சென்னை: இரண்டாவது கட்டமாக, கட்டப்படும் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.

சென்னையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதியை ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் யோகேஷ்வரன், “மெட்ரோ ரயில் நிலையங்களில் சாய்தள வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கடந்த 2017-ம் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 2020-ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள கூடுதல் அறிக்கையில் 40 சதவீதம் மட்டுமே முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சக்கர நாற்காலிகள் இருந்தும் பூமிக்கு கீழே அடுக்குமாடி தளங்களில் இயங்கும் மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளால் அவற்றை பயன்படுத்த முடியவில்லை” என குற்றம் சாட்டினார்.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ் ராமன், “தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. ஏற்கெனவே உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் ரயில் பெட்டிகள் மற்றும் நடைமேடைகளுக்கு இடையேயான இடைவெளியை குறைக்க மாற்றம் செய்தால் ஒட்டுமொத்த கட்டுமானமும் பாதிக்கப்படும். எனவே, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் கட்டப்படும்” என உறுதியளித்தார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இதுதொடர்பாக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *