சென்னை: சென்னை விமான நிலையத்தில் விரிவாக்கத்துக்காக நடைபெற்று வரும் 2-ம் கட்ட கட்டுமான பணிகளை, டெல்லியை சேர்ந்த அதிகாரிகள் குழு நேற்று ஆய்வு செய்தது. சென்னை விமான நிலையத்தில் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கையும், விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அந்த வகையில், கடந்த 2015-ம் ஆண்டு 2.2 கோடியாக இருந்த பயணிகளின் எண்ணிக்கை, 2025-ல் 3.5 கோடியை நெருங்கியிருக்கிறது.
இதையொட்டி, சென்னை விமான நிலையத்தை ரூ.2,467 கோடி மதிப்பீட்டில் 2.36 லட்சம் சதுர மீட்டரில் விரிவுபடுத்த திட்டமிட்டு, அதற்கான பணிகளை 2 கட்டங்களாக நடத்த இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, முதல் கட்ட பணிகள் ரூ.1,260 கோடியில் 1.49 லட்சம் சதுர மீட்டரிலும், 2-ம் கட்ட பணிகள் ரூ.1,207 கோடியில் 86,135 சதுரமீட்டரிலும் நடத்த திட்டமிடப்பட்டது.
தொடர்ந்து, 2023 ஏப்ரல் முதல்கட்ட பணிகள் நிறைவடைந்து, புதிய ஒருங்கிணைந்த முனையம் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இதையடுத்து, 2-ம் கட்ட விரிவாக்கத்துக்கான கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் நடப்பாண்டு இறுதிக்குள் முடிவடைந்து. 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த விமான நிலைய கட்டிடத்துக்காக நடந்து வரும் 2-ம் கட்ட பணிகளை, இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவர் விபின் குமார் தலைமையிலான மூத்த உயர் அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது பணிகளை விரைந்து நடத்தி முடித்து, 2026-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் புதிய ஒருங்கிணைந்த முனையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.