இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று (ஜூலை 28) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இலங்கை முதலில் பேட் செய்தது.
இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக குஷல் பெரேரா 34 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, பதும் நிசங்கா 32 ரன்களும், கமிந்து மெண்டிஸ் 26 ரன்களும் எடுத்தனர்.
இந்தியா தரப்பில் ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஹார்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்ஷர் படேல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.
3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, இன்றையப் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்போடு விளையாடி வருகிறது.