பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இங்கிலாந்து அணிக்கு இன்னும் 261 ரன்கள் தேவைப்படுகின்றன.
பாகிஸ்தான் – 366/10
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தானில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 366 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கம்ரான் குலாம் 118 ரன்களும், சயீம் ஆயுப் 77 ரன்களும் எடுத்தனர்.
இங்கிலாந்து தரப்பில் ஜாக் லீச் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். பிரைடான் கார்ஸ் 3 விக்கெட்டுகளையும், மேத்யூ பாட்ஸ் 2 விக்கெட்டினையும் மற்றும் சோயப் பஷீர் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: தில்லி கேபிடல்ஸ் அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்!
இங்கிலாந்து – 291/10
இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 291 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பென் டக்கெட் 114 ரன்களும், ஜோ ரூட் 34 ரன்களும் எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து, ஆலி போப் 29 ரன்களும், ஜாக் லீச் 25 ரன்களும் எடுத்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் சாஜித் கான் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். நோமன் அலி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பாகிஸ்தான் – 221/10
75 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி 221 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிபட்சமாக அஹா சல்மான் 63 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, சௌத் ஷகீல் 31 ரன்களும், கம்ரான் குலாம் 26 ரன்களும் எடுத்தனர்.
இங்கிலாந்து தரப்பில் சோயப் பஷீர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஜாக் லீச் 3 விக்கெட்டுகளையும், பிரைடான் கார்ஸ் 2 விக்கெட்டுகளையும் மற்றும் மேத்யூ பாட்ஸ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகும் பிரபல வேகப் பந்துவீச்சாளர்!
297 ரன்கள் இலக்கு
இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் 221 ரன்களுக்கு ஆட்டமிழக்க இங்கிலாந்துக்கு 297 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸின் தொடக்கமே இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது. பென் டக்கெட் 0 ரன்னிலும், ஸாக் கிராலி 3 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்கள் எடுத்துள்ளது. ஆலி போப் 21 ரன்களுடனும், ஜோ ரூட் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். போட்டியின் கடைசி இரண்டு நாள்களில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 261 ரன்களும், பாகிஸ்தானின் வெற்றிக்கு 8 விக்கெட்டுகளும் தேவைப்படுகின்றன.