இது குறித்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், “‘சிவசேனா கவுன்சிலர்களை எங்கள் பக்கம் இழுக்கும் பேச்சுக்கே இடமில்லை. நான் எங்களது கட்சியின் புனே கவுன்சிலர்களை சந்தித்து பேசியது போல் ஏக்நாத் ஷிண்டே தனது கட்சி கவுன்சிலர்களை சந்தித்து பேசி இருக்கலாம். மும்பையில் எங்களது கூட்டணியான மஹாயுதியை சேர்ந்த மேயர் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார். இவ்விவகாரத்தில் நான், ஏக்நாத் ஷிண்டே மற்றும் இரு கட்சி தலைவர்கள் அமர்ந்து பேசி முடிவு எடுக்கப்படும்.
இதில் எங்களுக்குள் எந்த வித கருத்து வேறுபாடும் இல்லை”என்று தெரிவித்தார். இது குறித்து சிவசேனா நிர்வாகி ஒருவர் கூறுகையில், ”மேயரின் பதவிக் காலத்தை 2.5 வருடங்கள் எங்களுக்கு கேட்கிறோம். இது முதல் 2.5 வருடங்களாக இருக்க வேண்டும். பாஜக இரண்டாவது 2.5 வருடங்களை எடுத்துக் கொள்ளலாம். பா.ஜ.க சொந்தமாக மேயர் பதவியை பிடிக்கும் அளவுக்கு இடங்களைப் பெறவில்லை, எனவே அவர்கள் பதவியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். நிலைக்குழுத் தலைவர் பதவி மற்றும் இதர குழுக்களின் தலைவர் பதவிகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் டாவோஸ் நகரில் நடக்கும் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக புறப்பட்டு சென்றுள்ளார். அவர் வந்த பிறகு அடுத்த வாரம் தான் மேயர் பதவி தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என்று பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வரும் 28ம் தேதி மேயர் தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பையில் முதல் முறையாக 10 நியமன கவுன்சிலர்கள் நியமிக்கப்பட இருக்கின்றனர். கட்சிகளிடம் இருக்கும் கவுன்சிலர்களின் எண்ணிக்கைக்கு தக்கபடி நியமன கவுன்சிலர்களை நியமித்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும். பா.ஜ.கவிற்கு 89 கவுன்சிலர்கள் இருப்பதால் அக்கட்சிக்கு அதிகபட்சமாக 4 நியமனக்கவுன்சிலர்கள் கிடைப்பார்கள்