காஞ்சிபுரம்: செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 19.28 அடியாக உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 2429 மில்லின் கன அடியாகும். நீர் வரத்து விநாடிக்கு 820 கன அடியாக பதிவாகியுள்ளது. இதனால் ஏரியின் மொத்த உயரமான 24 அடியில், நீர்மட்டம் தற்போது 20 அடியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
அணையின் பாதுகாப்பு கருதி ஏரியில் 21 முதல் 22 அடி வரை மட்டுமே நீர் தேக்கி வைக்கப்படும். இந்த ஏரியின் ஐந்து கண் மதகுகளின் மீது அதிகாரிகள் நடந்து செல்வதற்கும், ஷட்டர்களைத் திறப்பதற்கும் சிறிய அளவிலான நடைபாதை இருந்தது. தற்போது அதனை சுமார் எட்டு அடி அகலத்துக்கு அதிகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பேரிடர் காலங்களில் அவசர வாகனங்கள், அதிகாரிகள் செல்வதற்கு இந்தப் பாதை பயன்படுத்தப்படும்.