20 காளைகளை அடக்கி அபிசித்தர் ‘டாப்’ முதல் ‘பாகுபலி’ காளை வரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஹைலைட்ஸ் | Alanganallur Jallikattu : Abhisitthar tamed 20 bulls and takes first place

1347204.jpg
Spread the love

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 20 காளைகளை அடக்கி மதுரை பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் முதலிடம் பிடித்தார். அவருக்கு துணை முதல்வர் உதயநிதி சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.

989 காளைகள் அவிழ்ப்பு: மதுரை அலங்காநல்லூரில் இன்று (ஜன.16) நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 8 சுற்றுக்களாக 989 காளைகள் அவிழ்க்கப்பட்டன. இறுதி சுற்றான 8-வது சுற்றில் 43 வீரர்கள் களமிறக்கப்பட்டனர். இதில் 20 காளைகளை பிடித்த பூவந்தி அபிசித்தர் முதலிடம் பிடித்தார். 13 காளைகளை பிடித்த பொதும்பு ஸ்ரீதர் 2-வது பரிசையும், 10 காளைகளை பிடித்த மடப்புரம் விக்னேஷ் 3-வது பரிசும், 9 காளை பிடித்த ஏனாதி அஜய் 4-வது பரிசும் பெற்றனர். முதல் பரிசு பெற்ற அபிசித்தருக்கு துணை முதல்வர் உதயநிதி சார்பில் கார், மற்றும் பசுவும், கன்றும் பரிசாக வழங்கப்பட்டது. 2-வது பரிசு ஆட்டோ, 3-வது பரிசு பைக், 4-வது பரிசு டிவிஎஸ் எக்ஸ்எல் வழங்கப்பட்டது.

கார், டிராக்டர் பரிசுகள்: சிறந்த காளைக்கான முதல் பரிசை சோலம் மோகனின் பாகுபலி பெற்றது. முதல் பரிசாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் டிராக்டர் வழங்கப்பட்டது. எரக்கநாயக்கனூர் பார்த்தசாரதி காளைக்கு 2-வது பரிசாக பைக், புதுக்கோட்டை தாயினிப்பட்டி கண்ணன் காளைக்கு 3-வது பரிசாக எலக்ட்ரிக் பைக், இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டைமான் காளைக்கு 4-வது பரிசு லோடு பைக் வழங்கப்பட்டது. சிறந்த மாடுபிடி வீரர்கள், சிறந்த காளைகளுக்கான பரிசுகளை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்.

72 பேர் காயம்: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று காலை 8.15 மணிக்கு தொடங்கி மாலை 6.15 மணிக்கு முடிந்தது. மாடுபிடி வீரர்கள், பொதுமக்கள் என 72 பேர் காயமடைந்தனர். இதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அசத்தும் அபிசித்தர்: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில்முதல் பரிசு பெற்ற அபிசித்தர், கடந்த ஆண்டு அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 2-வது பரிசும், அதன் பிறகு அலங்காநல்லூர் ஏறுதழுவுதல் அரங்கில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் முதல் பரிசும் பெற்றார். சிறந்த மாடுபிடி வீரருக்கான முதல் பரிசு பெற்ற அபி சித்தர் கூறுகையில், “கடந்த முறை அலங்காநல்லூரில் 2-வது பரிசு பெற்றேன். இந்த முறை முதல் பரிசு பெற வேண்டும் என தீவிரமாக விளையாடினேன். ஜல்லிக்கட்டு உயிரை பணயம் வைத்து விளையாடும் விளையாட்டு. அனைத்து மாடுபிடி வீரர்களுக்கும் காப்பீடு செய்ய வேண்டும். மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். என் வெற்றிக்கு நண்பர்கள் தான் காரணம்,” என்றார்.

பாகுபலி காளைக்கு முதல் பரிசு: சிறந்த காளைக்கான முதல் பரிசு பெற்ற சேலம் பாகுபலி காளையின் உரிமையாளர் மோகன் கூறுகையில், “வீரப்பன் என்ற பாகுபலி என்ற பெயரில் காளை அவிழ்த்தேன். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் முறையாக காளை அவிழ்த்தேன். முதல் பரிசு பெற்றுத் தந்துள்ளது. எனக்கு பெருமையாக உள்ளது,” என்றார்.

உதயநிதி தொடங்கி வைத்தார்: உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார். உதயநிதியுடன் அவரது மகன் இன்பநிதியும் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண வந்திருந்தார். அவர்களை அமைச்சர்கள் மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் வரவேற்றனர். முன்னதாக, மாடுபிடி வீரர்கள் அமைச்சர், ஆட்சியர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

கவனம் ஈர்த்த இன்பநிதி… துணை முதல்வர் உதயநிதியுடன் வந்திருந்த அவரது மகன் இன்பநிதி போட்டியைக் கண்டு ரசித்தார். திமுக நிர்வாகிகள் மட்டுமில்லாது அரசு அதிகாரிகளும் இன்பநிதியிடம் பவ்யம் காட்டியது, சிறந்த காளை, மாடுபிடி வீரர்களுக்கு அவரை வைத்து பரிசு கொடுக்க வைத்தது ஜல்லிக்கட்டு களத்தை தாண்டி, அரசியல் வட்டாரத்தில் ‘கவனம்’ பெற்றது. அமைச்சர் பி.மூர்த்தி, உதயநிதிக்கு விழாக்குழு சார்பில் பொன்னடை போர்த்தியபோது இன்பதிநிதிக்கும் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார்.

வாடிவாசலில் விழுந்த ட்ரோன் கேமிரா: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி ட்ரோன் கேமராவில் படம்பிடிக்கப்பட்டது.இந்த ட்ரோனை உதயநிதி அமர்ந்திருந்த மேடையில் இருந்தவர்கள் ரிமோட் மூலம் இயக்கி கொண்டிருந்தனர். அந்த ரிமோட்டை உதயநிதி வாங்கி கொஞ்ச நேரம் மேடையில் இருந்தபடி ட்ரோன் கேமராவை இயக்கினார். பின்னர் இன்பநிதி கொஞ்ச நேரம் ட்ரோன் கேமராவை இயக்கினார். அப்போது எதிர்பாராவிதமாக ட்ரோன் கேமரா திடீரென வாடிவாசல் முன்பு தரையில் விழுந்தது. அதை மாடுபிடி வீரர் ஒருவர் எடுத்து வந்து திரும்ப ஒப்படைத்தார். இதனால் வாடிவாசலில் பரபரப்பு ஏற்பட்டது.

வெளிநாட்டு ஆர்வலர் தகுதிநீக்கம்: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அயர்லாந்து நாட்டிலிருந்து அந்தோணி கான் லான் (53) என்பவர் அடிக்கடி வருவது வழக்கம்.இந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரராக களமிறங்க ஆன்லைன் மூலம் தனது பெயரை பதிவு செய்து இருந்தார். இன்று ஜல்லிக்கட்டு திடலுக்கு வந்து உடல் தகுதி தேர்வில் பங்கேற்று அதில் தேர்வானார். பின்னர் வயதை காரணம் காட்டி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.மாடுபிடி வீரர்களுக்கு 40 வயது இருக்க வேண்டும். ஆனால், அந்தோணிக்கு 53 வயது என்பதால் போட்டியிலிருந்து நீக்கப்பட்டார். தகுதி நீக்கம் செய்யப்பட்டதும் அவர் கண்ணீர் விட்டு அழுதார்.

– கி.மகாராஜன், என்.சன்னாசி

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *