'20 வருஷ கனவு; பஸ் கண்டக்டரா மட்டுமே ஆகணும்னு இருந்தேன்' Tirunelveli First Woman Bus Conductor பகவதி

Spread the love

“படித்த படிப்புக்கு ஏதோ ஓர் அலுவலக வேலைக்குச் செல்வதை விட, பல முகங்களைச் சந்திக்க முடிகின்ற இந்த வேலைதான் எனக்கு வேண்டும்” என்று அடம் பிடித்து, திருநெல்வேலியில் முதன்முறையாகப் போக்குவரத்துத் துறையில் நடத்துனராக என்ட்ரீ கொடுத்திருக்கிறார், பகவதி (38). இவர் 12-ம் வகுப்பு முடித்திருக்கிறார். இவருக்குக் கல்லூரி படிக்கக்கூடிய இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். தான் இந்தத் துறைக்கு வந்ததைப் பற்றியும் தன்னுடைய பணி அனுபவத்தைப் பற்றியும், பகவதி நம்முடன் பகிர்கிறார்.

`கண்டக்டர் தான் ஆகணும்’

“நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே…. ஃபியூச்சர்ல பஸ் கண்டக்டரா ஆகணும்னு நினைச்சேன். எல்லாரும் பண்ற மாதிரி இல்லாம தனித்துவமா இருக்கணும்னுதான் இந்தப் பணியை தேர்ந்தெடுத்தேன். கண்டக்டர் ஆகணுங்கிறது எனக்கு 20 வருஷக் கனவு. நான் வேலைக்குச் சேர்ந்து ரெண்டு மாசம் ஆச்சு. எனக்கு இப்போ 38 வயசு ஆகுது. நான் என் வாழ்நாளிலேயே இந்த ரெண்டு மாசத்துலதான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, ‘போலாம் ரைட்’ என்று கணீரென விசில் அடித்துவிட்டு, மீண்டும் பேசத்தொடங்கினார்.

பகவதி

‘கனரக வாகனங்களும் ஓட்டுவேன்’

“நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தென்காசி மாவட்டம், தென்மலை துரைச்சாமியபுரம். திருநெல்வேலி சைல்ட் ஜீசஸ் பெண்கள் பள்ளியில் ஹாஸ்டலில் தங்கி பிளஸ் டு வரைக்கும் படிச்சேன். நான் 2015-லேயே கண்டக்டர் லைசென்ஸ் வாங்கி வச்சுட்டேன். நான் கனரக வாகனங்களும் ஓட்டுவேன். அதுக்கான லைசென்ஸும் வச்சிருக்கேன். 2015-ல் இந்தப் பணிக்கு அப்ளை பண்ணினேன். ஆனால் கிடைக்கல. இனிமே எப்படா இன்டர்வியூ வைப்பாங்கன்னு 10 வருஷம் காத்திருந்து, இந்த வேலைக்கு வந்தேன். கண்டக்டர் வேலை கிடைக்கிற வரைக்கும் மில்லுல வேலை பார்த்துட்டு இருந்தேன்.” என்றவரிடம், நடத்துனர் பணியின் அனுபவத்தைப் பற்றி கேட்டோம்.

‘வீட்டைப் பத்தி சிந்திக்கவே மாட்டேன்’

“நான் பாக்குற இந்த வேலை, நான் போடுற இந்த ட்ரெஸ்கோடு, நான் சந்திக்கிற பல முகங்கள் அப்படின்னு எனக்கு எல்லாமே ரொம்பப் புடிச்சிருக்கு. எல்லாருமே எனக்கு ரொம்ப உறுதுணையா இருக்காங்க. அன்பா என்கிட்ட பேசுறாங்க. எனக்குத் தெரியாத பல விஷயங்கள எனக்குச் சொல்லி தராங்க. எனக்கு வீட்லயும் பயங்கரமா சப்போர்ட் உண்டு.

எனக்கு ரெண்டு பொண்ணுங்க. ரெண்டு பேருமே கல்லூரி படிக்கிறாங்க. நான் இந்த வேலைக்கு வந்துட்டா வீட்டைப் பத்தி சிந்திக்கவே மாட்டேன். அந்த அளவுக்கு இந்த வேலை எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு. வர்றவங்க போறவங்க எல்லாருமே என்னைப் பாராட்டிக் கைகொடுத்துட்டுதான் போவாங்க. காலைல 7 மணிக்கு வேலைக்கு வந்துட்டு நைட் 7 மணிக்குக் கிளம்பிடுவேன். லீவ் எடுக்கவே எனக்கு சுத்தமா பிடிக்காது.

பகவதி

திருநெல்வேலி டவுன் – ஹைக்ரவுணட் , 3HA பஸ்லதான் வேலை பாக்குறேன். இங்க வர சில அக்காமாரு எனக்கு சாப்பாடுலாம் செஞ்சு எடுத்துட்டு வருவாங்க.”

‘பெண்கள் அதிகமா வரணும்’

“நான் படிச்சு வேற ஏதோ வேலைக்குப் போயிருந்தாக்கூட ஓர் ஆபீஸ்ல உக்காந்துட்டு இருப்பேன். அந்த வேலை அந்த ஆபீஸோட முடிஞ்சிடும். ஆனா இந்த வேலை அப்படிக் கிடையாது. ஒவ்வொரு நாளும் புதுப் புது முகங்களைச் சந்திக்கிறேன்.

ரொம்பவும் ஆர்வமாகவும் சந்தோஷமாகவும் இருக்கு. என்னைப்போல இது மாதிரியான துறைகளுக்கு இன்னும் அதிகமா பெண்கள் வரணும். அதுதான் என்னோட ஆசை. வாழ்நாள் முழுவதையும் இந்தப் பணியிலேயே கழிக்கணுங்கிறதுதான் என் கனவு” என்றார் மன நிறைவுடன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *