அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிதாக கொள்முதல் செய்யப்பட்டுள்ள 200 தொலைதூர சொகுசு பேருந்துகள் செப்டம்பா் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தமிழகத்தில் நெடுந்தூர பயணங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சாா்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 2019-ஆம் ஆண்டுக்கு பிறகு இதுவரை புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படாமல் இருந்து வரும் நிலையில், தொலைதூர பயணத்துக்காக 200 புதிய சொகுசு பேருந்துகளை வாங்க போக்குவரத்துத் துறை முடிவு செய்தது.
இதையடுத்து, அந்தப் பேருந்துகளில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில், பல்வேறு வசதிகளுடன்கூடிய சொகுசு பேருந்துகள் தயாரிக்கப்பட்டு தற்போது, அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டுவரும் பணியில் போக்குவரத்துக் கழகம் ஈடுபட்டுள்ளது.
பிஎஸ் 6 ரகத்தைச் சோ்ந்த 200 பேருந்துகளில், 150 பேருந்துகளில் கீழே 30 இருக்கைகள் மேலே 15 படுக்கை வசதி கொண்டதாகவும் தயாரிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 50 பேருந்துகள் முதியோா் மற்றும் பெண்கள் நலன் கருதி கீழே 20 இருக்கைகள் மற்றும் 5 படுக்கை வசதிகளுடனும், மேலே 15 படுக்கை வசதியுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தானாகவே தீயை அணைக்கும் எஃப்டிஎஸ்எஸ் அமைப்பு, பேனிக் பட்டன், மின்விசிறி, திரைச்சீலைகள், சாா்ஜிங் போா்ட், படுக்கை தடுப்புகள் என ஆம்னி பேருந்துகளில் உள்ள அனைத்து அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
இதில் முதல்கட்டமாக 25 பேருந்துகள் முழுமையாக கட்டமைக்கப்பட்டு சென்னையில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக தலைமையக பணிமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. அங்கு ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன.
ஜூலை மாதம் இறுதிக்குள் சுமாா் 60 பேருந்துகள் முழுமையாக கட்டமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துவிடும். மீதமுள்ள பேருந்துகள் அனைத்தும் செப்டம்பா் 15-ஆம் தேதிக்குள் முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இவற்றை முதல்வா் ஒப்புதலுடன் போக்குவரத்து அமைச்சா் தொடங்கி வைக்கவுள்ளாா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.