முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் செய்த தவறுக்கான பலனை தற்போது அனுபவித்து வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
மதிமுக நிர்வாக குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அவைத்தலைவர் அர்ஜூனன்ராஜ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வைகோ, பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பிஹாரில் நடந்த வாக்காளர் திருத்தப் பட்டியலில் நடந்த முறைகேடுகளை தமிழகத்திலும் செயற்படுத்த முனைந்துள்ள தேர்தல் ஆணையத்தின் முயற்சிகளை அனைத்துக் கட்சிகளும் முறியடிக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் சாலைப் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு பரிந்துரை செய்துள்ள விதிகளை அரசு மாற்றி அமைக்க வேண்டும் உட்பட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் கூட்டத்தில் வைகோ பேசியதாவது: கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில், அதிமுக-விலிருந்து கூட்டணி பேச்சுவார்த்தைக்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் மதிமுக அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது 12 தொகுதிகள் தருவதாக கூறினர். அதை ஏற்க மறுத்து, “மாலை5 மணி வரை காத்திருக்கிறோம். ஜெயலலிதாவிடம் பேசிவிட்டு நல்ல பதிலைக் கூறுங்கள்” என ஓபிஎஸ் உள்ளிட்டோரிடம் கூறி அனுப்பினேன்.
ஆனால், மாலை 5 மணி வரை காத்திருப்பதாக கூறியதை வைகோ கூட்டணிக்கு வர தயாராக இல்லை என ஜெயலலிதாவிடம் ஓபிஎஸ் உள்ளிட்டோர் பொய்யாகக் கூறிவிட்டனர். இதனால் அதிமுக கூட்டணியில் மதிமுக இடம்பெறவில்லை. அந்த தேர்தலில் 15 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் தர ஜெயலலிதா தயாராக இருந்தது பிறகு தான் எனக்கு தெரியவந்தது. 2011-ல் கூட்டணி விவகாரத்தில் ஓபிஎஸ் செய்த தவறுக்கு தற்போது பலனை அனுபவிக்கிறார்.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தபோது ஒரே ஓட்டமாக சென்னைக்கு ஓடி வந்த தவெக தலைவர் விஜய், நிதி கொடுக்கிறேன் எல்லோரும் என்னை பார்க்க வாருங்கள் என்று அழைத்து தமிழக வரலாற்றில் யாரும் செய்யாத பித்தலாட்டத்தனத்தை செய்திருக்கிறார். இவ்விவகாரத்தில் முதல்வர் அரசியல் செய்ய வேண்டாம் என்றார். ஆனால், நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம். திமுக-வுக்கும் எங்களுக்கும் தான் போட்டி என சகட்டு மேனிக்கு விஜய் பேசுகிறார். அரசியலில் ஆத்திச்சூடி கூட அறியாத விஜய்,ஆட்சிக்கு வந்து தற்போதே முதல்வர் ஆகிவிட்டது போல கனவுலகத்தில் மிதந்து கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.