2016-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு விடைத்தாளை மாற்றி மோசடி செய்த வழக்கு: 6 மாதத்தில் விசாரித்து முடிக்க உத்தரவு | 2016 TNPSC Group 1 answer sheet cheating case: HC Order to complete investigation in 6 months

1303181.jpg
Spread the love

சென்னை: கடந்த 2016-ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 1 தேர்வுக்கான விடைத்தாளை மாற்றி மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கு விசாரணையை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 6 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2016-ம் ஆண்டு குரூப் 1 தேர்வை நடத்தியது. இந்த தேர்வில் பங்கேற்ற ராம்குமார் என்பவர் விடைத்தாளை மாற்றி முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்டார். அவருக்கு உதவிய நபரான கருணாநிதி மற்றும் டிஎன்பிஎஸ்சி ஊழியர்கள் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி இந்த வழக்கில் உள்ள கருணாநிதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், ‘விடைத்தாளை மாற்றிய விவகாரத்தில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. ராம்குமார் நடத்திய சிசிடிவி காமிரா பொருத்தும் நிறுவனத்தில் மாத ஊதிய அடிப்படையில் பணிபுரிந்தேன். ராம்குமார் எழுதி கொடுக்கச் சொன்னதை எழுதி கொடுத்தேன். ஆனால், அவர் குரூப்1 தேர்வுக்கான விடைத்தாளில் முறைகேடு செய்வார் என எனக்குத் தெரியாது. ஆனால், போலீஸார் முறையாக விசாரணை நடத்தாமல் என் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே கீழமை நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.சேஷசாயி முன்பாக இன்று (ஆக.30) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு குற்றவியல் வழக்கறிஞர் சி.இ.பிரதாப் ஆஜராகி, “இந்த வழக்கில் இதுவரை 65 சாட்சிகள் சேர்க்கப்பட்டு, அதில் 10 பேரிடம் சாட்சி விசாரணை முடிந்துள்ளது. இந்த சூழலில் இந்த வழக்கு விசாரணையை ரத்து செய்யக்கூடாது” என்றார். அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து, விசாரணையை 6 மாதங்களில் விசாரித்து முடிக்க சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *