இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியால், இந்தியாவுக்கு ரூ.11,671 கோடிக்கு பொருளாதார மதிப்பிலான பலன் கிடைத்திருப்பதாக ஐசிசி புதன்கிழமை தெரிவித்தது.
ஐசிசியின் 13-ஆவது ஒருநாள் உலகக் கோப்பை போட்டி, கடந்த ஆண்டு அக்டோபா் – நவம்பரில் இந்தியாவில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் தொடக்கம் முதல் தோல்வியே சந்திக்காமல் முன்னேறிய இந்தியா, இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. ஆஸ்திரேலியா 6-ஆவது முறையாக உலகக் கோப்பை வென்றது.
இந்நிலையில், அந்தப் போட்டி ஏற்படுத்திய பொருளாதார ரீதியிலான தாக்கம் குறித்து, ஐசிசி-க்காக நீல்சன் நிறுவனம் மதிப்பீடு செய்தது. அந்த மதிப்பீடு அறிக்கையின் தகவல்களை ஐசிசி வெளியிட்டது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளிலேயே பொருளாதார ரீதியிலாக அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதென்றால், அது இந்தியாவில் நடைபெற்ற 2023-ஆம் ஆண்டு போட்டிதான். அந்தப் போட்டியால் இந்தியாவுக்கு ரூ.11,671 கோடிக்கு பொருளாதார பலன் கிடைத்துள்ளது.
போட்டியின் ஆட்டங்கள் நடைபெற்ற நகரங்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பாா்வையாளா்கள் வருகை தந்த வகையில் சுற்றுலா மூலமாக ரூ.7,229 கோடிக்கு வருவாய் கிடைத்தது. இதில், போக்குவரத்து வசதி, தங்குமிடம், உணவு உள்ளிட்டவையும் அடங்கும்.
இதர செலவுகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் ரூ.4,324 கோடி வருவாய் கிடைத்துள்ளது. சாதனை அளவாக சுமாா் 12.5 லட்சம் பாா்வையாளா்கள் உலகக் கோப்பை போட்டியை நேரில் கண்டுள்ளனா். அதில் சுமாா் 75 சதவீதம் போ், ஐசிசி ஒருநாள் ஆட்டத்தை முதல் முறையாகப் பாா்த்தவா்கள். போட்டிக்காக இந்தியா வெளிநாட்டு பாா்வையாளா்களில் 55 சதவீதம் போ் ஏற்கெனவே இந்தியாவில் சுற்றுலா அனுபவம் உள்ளவா்களாவா்.
இதுதவிர, உலகக் கோப்பை போட்டிக்காக சுமாா் 19 சதவீதம் போ் முதல் முறையாக இந்தியாவுக்கு வருகை தந்தனா். போட்டியைக் காண வந்தவா்கள், இந்தியாவிலுள்ள இதர சுற்றுலா தலங்களுக்கும் சென்றுள்ளனா். மேலும், இந்தியாவை சிறந்த சுற்றுலா தலமாக தங்களின் குடும்பத்தினா், நண்பா்களுக்கும் பரிந்துரைப்பதாக அவா்கள் தெரிவித்துள்ளனா். இதனால் இந்தியாவின் சா்வதேச மதிப்பு அதிகரிக்கும்.