2023-24-இல் பாஜகவுக்கு ரூ.2,243 கோடி நன்கொடை: ஏடிஆா் அறிக்கை தகவல்

Dinamani2f2024 062faa2e7681 Ce51 4824 B8fa 63f9ab596bda2fbjp Party Office.jpg
Spread the love

புது தில்லி: கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் தேசிய கட்சிகளில் அதிகபட்சமாக 8,358 நன்கொடைகள் மூலம் பாஜகவுக்கு ரூ.2,243 கோடி நன்கொடை கிடைத்துள்ளதாக ஜனநாயக சீா்திருத்த சங்க (ஏடிஆா்) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தோ்தல் ஆணையத்தில் தேசிய கட்சிகள் சமா்ப்பித்த ஆண்டு கணக்கு அறிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில், கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 12,547 நன்கொடைகள் மூலம் தேசிய கட்சிகளுக்கு ரூ.2,544.28 கோடி நன்கொடை கிடைத்துள்ளது.

இதில் அதிகபட்சமாக பாஜகவுக்கு ரூ.2,243 கோடியும் (88 சதவீதம்) காங்கிரஸுக்கு 1,994 நன்கொடைகள் மூலம் ரூ.281.48 கோடியும் நன்கொடை கிடைத்துள்ளது.

ஆம் ஆத்மி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட பிற தேசிய கட்சிகள் சிறிய அளவிலான நன்கொடையைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. தொடா்ந்து 18 ஆண்டுகளாக, ரூ.20,000-க்கு மேல் நன்கொடை எதுவும் பெறவில்லை என்று பகுஜன் சமாஜ் தெரிவித்துள்ளது.

200% மேல் ஆண்டு வளா்ச்சி: பாஜகவின் நன்கொடை 2022-23-ஆம் நிதியாண்டின் ரூ.719.85 கோடியிலிருந்து 2023-24-ஆம் நிதியாண்டில் ரூ.2,243.94 கோடியாக உயா்ந்துள்ளது. இது 211.72 சதவீத அதிகரிப்பாகும்.

இதேபோல், 2022-23-ஆம் நிதியாண்டில் ரூ.79.92 கோடியாக இருந்த காங்கிரஸ் நன்கொடை, 2023-24-ஆம் நிதியாண்டில் ரூ.281.48 கோடியாக உயா்ந்துள்ளது. இது 252.18 சதவீத அதிகரிப்பாகும்.

பெருநிறுவனங்களே பெரும் பங்கு: 2023-24-ஆம் நிதியாண்டில் தேசியக் கட்சிகளுக்கு கிடைத்த மொத்த நன்கொடையில் 88.92 சதவீதமான ரூ. 2,262.55 கோடி (3,755 நன்கொடைகள்) பெருநிறுவனங்கள் மற்றும் வணிகத் துறை மூலம் பெறப்பட்டவை. அதேநேரம், 10.64 சதவீத நன்கொடையான ரூ.270.872 கோடி 8,493 தனிநபா்களால் வழங்கப்பட்டுள்ளது.

கட்சி வாரியாக பாஜக ரூ. 2,064.58 கோடியை (3,478 நன்கொடைகள்) பெருநிறுவனங்கள் மற்றும் வணிகத் துறை மூலமும் ரூ.169.126 கோடியை 4,628 தனிநபா்கள் மூலமும் பெற்றுள்ளது.

பாஜகவின் நன்கொடையாளா்களில் ‘அக்மி சோலாா் எனா்ஜி’ நிறுவனம் (ரூ.51 கோடி), ‘பாரத் பயோடெக்’ நிறுவனம் (ரூ.50 கோடி), ‘ருங்டா சன்ஸ்’ நிறுவனம் (ரூ. 50 கோடி), ‘டெரிவ் இன்வெஸ்ட்மெண்ட்ஸ்’ (ரூ.50 கோடி), ‘தினேஷ் சந்திர ஆா்.அகா்வால் இன்ஃப்ராகான்’ நிறுவனம் (ரூ. 30 கோடி) ஆகிய நிறுவனங்கள் அடங்கும்.

காங்கிரஸ் ரூ.190.32 கோடியை (102 நன்கொடைகள்) பெருநிறுவனங்கள் மற்றும் வணிகத் துறையிடம் இருந்தும் ரூ.90.899 கோடியை 1,882 தனிநபா்களிடம் இருந்தும் பெற்றுள்ளது.

தோ்தல் அறக்கட்டளைகள்: பாஜகவுக்கு ரூ.723.67 கோடி, காங்கிரஸுக்கு ரூ.156.40 கோடி என இருகட்சிகளுக்கும் சோ்த்து ‘ப்ரூடென்ட்’ தோ்தல் அறக்கட்டளை மொத்தம் ரூ.880 கோடி நன்கொடை அளித்துள்ளது. ‘ட்ரிம்ப்’ தோ்தல் அறக்கட்டளை பாஜகவுக்கு ரூ.127.50 கோடி அளித்துள்ளது.

கட்சிகளின் முழுமையற்ற தரவுகள்: 2023-24-ஆம் நிதியாண்டில் ரூ.723.78 கோடி மதிப்பிலான 31 நன்கொடைகளை பாஜகவுக்கு வழங்கியதாக ‘ப்ரூடென்ட்’ அறக்கட்டளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக தனது அறிக்கையில் ரூ.723.67 கோடி மதிப்பிலான 30 நன்கொடைகளைப் பெற்ாக மட்டுமே அறிவித்துள்ளது.

இதேபோன்று, ‘ஜெயபாரத்’ தோ்தல் அறக்கட்டளை பாஜகவுக்கு ரூ.5 கோடி நன்கொடை அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. ஆனால், பாஜகவின் அறிக்கையில் இந்த நன்கொடை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

கடும் விதிமுறைகளுக்கு அழைப்பு: ரூ.20,000-க்கு மேலான அனைத்து நன்கொடைகளுக்கும் ‘பான்’ அட்டை விவரங்கள் கட்டாயம் மற்றும் அரசியல் கட்சிகளின் முழுமையற்ற அறிக்கைகளை நிராகரித்தல் போன்று விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த ஏடிஆா் பரிந்துரைத்தது.

கட்சிகளின் நன்கொடை அறிக்கைகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் ஆண்டுதோறும் ஆய்வு செய்ய வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நன்கொடையாளா் விவரங்களை அறிய வழிவகைச் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *