திமுகவினர் இதனை வரவேற்றாலும், வாரிசு அரசியல் என அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துகொண்டிருக்கின்றன.
ஆனால், துணை முதல்வர் உதயநிதி, பல இடங்களிலும் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்குப் பதிலாக இடம்பெற்று வருகிறார்.
அமைச்சரவையிலும் முதல்வர் மு.க. ஸ்டாலின், துரைமுருகனுக்கு அடுத்தபடியாக உதயநிதிக்கு மூன்றாமிடம் வழங்கப்பட்டுள்ளது.
சமீபமாக சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள், ஏரிகளில் ஆய்வு, ஃபென்ஜால் புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிடுதல், நிவாரணம் வழங்குதல் என மக்களை நேரடியாகச் சென்று சந்தித்து வருகிறார்.
அரசின் முக்கிய திட்டங்களைத் தொடக்கிவைப்பது, முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, மாவட்டங்களில் ஆய்வுகள் என மும்முரமாக இருக்கிறார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போதும் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இணையாக வைத்தே உதயநிதியைப் பார்க்கின்றனர் மூத்த அமைச்சர்கள். நிகழ்ச்சிகளிலும் அதேயளவுக்கு உதயநிதி ஸ்டாலின் முன்னிறுத்தப்படுகிறார்.
மேலும் இம்மாத தொடக்கத்தில், மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவராக உதயநிதி ஸ்டாலினை நியமித்தது தமிழக அரசு. திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறையி்ன் அமைச்சர் என்ற முறையில் உதயநிதி அலுவல்சாரா துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அனைத்து ஆய்வுக்கூட்டங்களிலும் அவருக்கு அடுத்தபடியாக அமர்ந்தே கலந்துகொள்கிறார்.
விஜய்யின் அரசியல் நுழைவானது தேர்தலில் திமுகவுக்கு கடும் போட்டியைத் தரும் என்பதாகப் பேசப்படும் நிலையில், ஒரு கூட்டத்தில் விஜய் பேசியது பற்றிக் கேட்டபோது, ‘நான் சினிமா நிகழ்ச்சிகள் பார்ப்பதில்லை’ என்று தடாலடியாகப் பதிலளித்துச் சென்றார்.
அமைச்சரவை மாற்றம்
அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது.
துறைகள் மாற்றம்: உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு வனத் துறையும், சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த சிவ.வீ. மெய்யநாதனுக்குப் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையும் வனத் துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன், ஆதிதிராவிடர் நலத் துறைக்கும், ஆதிதிராவிடர் நலத் துறையைக் கையாண்டு வந்த கயல்விழி செல்வராஜுக்கு மனிதவள மேம்பாட்டுத் துறையும் ஒதுக்கப்பட்டன.