முதல்வர் மருந்தகங்கள் உருவாக்கப்பட்டு, வரும் 2025 ஜனவரி மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முதல்வர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தினவிழா உரையில், “பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும்“ என்று அறிவித்தார்.
இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள், மாவட்ட மருந்து சேமிப்புக் கிடங்குகள் அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து கூட்டுறவுத்துறை மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகம் ஆகியோருக்கு உரிய அறிவுரைகள் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.