இப்படியான சமயத்தில், 2025-ம் ஆண்டு கோலிவுட்டுக்கு எப்படியான வருடமாக அமைந்திருக்கிறது என்ற கேள்வியோடு முதலில் தயாரிப்பாளர் மற்றும் சினிமா வணிக ஆய்வாளரான தனஞ்செயனைத் தொடர்புக் கொண்டோம்.
”இந்தாண்டு எத்தனை படங்கள் தயாரிப்பாளர்களுக்கு லாபம் தந்தன? எப்படியான வகைகளில் அவை லாபம் தந்தன? இந்தாண்டு தயாரிப்பாளர்களுக்கு எப்படியானதாக இருந்திருக்கிறது?” என அனைத்துக் கேள்விகளுக்கும் விரிவான பதிலை நம்மிடையே பகிர்ந்து கொண்ட தனஞ்செயன், “இந்தாண்டு மட்டும் தமிழ் சினிமாவில் மொத்தமாக 285 திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. அதிகமான திரைப்படங்கள் வெளியான ஆண்டு என இந்த வருடத்தை நாம் குறிப்பிடலாம்.
அந்த 285-ல், 35 திரைப்படங்கள் தயாரிப்பாளர்களுக்கு லாபகரமானதாக அமைந்திருக்கிறது. இந்த 35 படங்களில் சிலவற்றுக்குத் திரையரங்குகளில் பெரிய வரவேற்பு கிடைத்திருக்காது.
ஆனால், அவை ஓடிடி, டிஜிட்டல் உள்ளிட்ட பிசினஸ் மூலம் லாபத்தை தொட்டிருக்கின்றன. சினிமாவில் வணிக ரீதியான வெற்றி என்பதே மிக முக்கியமானது. கடந்தாண்டு 25 திரைப்படங்கள் மட்டுமே லாபங்களை தயாரிப்பாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தன.
இந்தாண்டு அந்தக் கணக்கு அதிகரித்திருக்கிறது. ஆனால், 2023, 2024-ம் ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்தாண்டில் திரையரங்க வசூல் குறைந்திருக்கிறது.
இதற்கு கன்டென்ட்தான் முக்கியமான காரணம். சில திரைப்படங்கள் ரிலீஸுக்கு முன்பே லாபகரமான இடத்தை அடைந்துவிடுகிறது.