2025-ம் ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருதுகள்: தமிழக அரசு அறிவிப்பு  – Kumudam

Spread the love

2025-ஆம் ஆண்டிற்கான இலக்கிய மாமணி விருதுகளில் மரபுத் தமிழ் வகைப்பாட்டில் ”தமிழ்நாட்டில் பல இளைஞர்களுக்கு மேடைப் பேச்சாற்றலுக்கான நல்வழிகாட்டியாகவும் உந்து சக்தியாகவும் திகழ்ந்து வருபவரும் சென்னை, கம்பன் கழகத்தில் செயற்குழு உறுப்பினராகப் பணியாற்றியவரும் மாபெரும் தமிழறிஞர்களின் வழிகாட்டுதல்களோடு இலக்கியப் பணியாற்றி வரும் இலக்கியச் சுடர் த. இராமலிங்கம் (வயது 68); 

ஆய்வுத் தமிழ் வகைப்பாட்டில் இலக்கியப் பேராசான் ஜீவானந்தம், 1959-இல் தொடங்கப்பட்ட தாமரை இலக்கிய இதழின் ஆசிரியராக கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவரும், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரும், சமூக விழிப்பு கொண்ட எழுத்துப் பணிகளை மேற்கொண்டு வருபவரும், சீர்திருத்த மேடைப் பேச்சாளராக அணி செய்பவரும், “வீழ்வேன் என்று நினைத்தாயோ?, “தீக்குள் விரலை வைத்தேன்”, தமிழ்நாடு பிறந்தது (தொகுப்பு)” உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவருமான எழுத்தாளர் சி. மகேந்திரன் (வயது 73);

படைப்புத்தமிழ் வகைப்பாட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் ஆசிரியராக இருந்த ‘நம்நாடு’ வார ஏட்டில்  தொடர்ந்து கட்டுரைகளை எழுதியதோடு, வைகறை முரசு இதழில் தொடர்ந்து எழுதியவரும் தென்காசி திருவள்ளுவர் கழகத்தில் வள்ளுவம் தொடர்பான தொடர் சொற்பொழிவுகளை ஆற்றி வருபவரும்,  திராவிடச் சிந்தனையில் ஆழ்ந்து பல படைப்பு நூல்களை வெளியிட்டதோடு, தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு அறிஞர்களை அழைத்து இராசபாளையத்தில் அருமையான இலக்கிய நிகழ்ச்சிகளை  நடத்துவதை தொடர் பணியாக செய்யும் அறிவுத்திலகமான விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இரா. நரேந்திரகுமார் (வயது 74) தெரிவு செய்யப்பெற்றுள்ளனர்.

இலக்கிய மாமணி விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூபாய் ஐந்து இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை ஆகியவை வழங்கப் பெற்று, பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப் பெறுவார்கள். இவ்விருதுகள் தமிழக முதல்வர் ஸ்டாலின் திருவள்ளுவர் திருநாளான 16.01.2026 அன்று வழங்க உள்ளார். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *