“2026-க்குள் அதிமுக ஒன்றிணையும்” – வி.கே.சசிகலா நம்பிக்கை  | VK Sasikala talks on ADMK

1332634.jpg
Spread the love

மதுரை: “2026-க்குள் அதிமுக ஒன்றிணையும். மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவரே தமிழக முதல்வர்” என வி.கே.சசிகலா மதுரையில் நம்பிக்கை தெரிவித்தார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்க சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று சசிகலா மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ”மதுரையில் சில நாட்களாக பெய்த கனமழையால் பல இடங்களில் தண்ணீர் போக வழியின்றி, முல்லைநகர், குறிஞ்சி நகர், பி.பி.குளம் போன்ற பகுதியில் தண்ணீர் வீடுகளைச் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மா காலத்தில் ஒரு அமைச்சரே ஒரு துறையை பார்க்கும்போது, பிரச்சினை இல்லை. தற்போது 3 அமைச்சர்கள் ஒரு துறையைப் பார்க்கின்றனர்.

திமுக ஆட்சியில் கட்சி சார்பிலான நிகழ்ச்சிகளை ஒழுங்காக நடத்துகின்றனர். தமிழக மக்கள் திமுக அரசாங்கத்தின் பிடியில் மாட்டிக்கொண்டனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. 2026 -ல் நிச்சயமாக அம்மாவின் ஆட்சி வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும். அதிகாரிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தொண்டர்கள் ஒட்டிய போஸ்டரை கிழிக்கிறார்கள் என்பதை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. தலைவருக்கும், அவருக்குப் பின்பு அம்மாவிற்கும் இது போன்று நடந்துள்ளது. மக்கள் மனதில் யார் இருக்கின்றனர் என்பதைத் தான் பார்க்க வேண்டும்.

யார் வேண்டுமென்றாலும் கட்சி தொடங்கலாம். அதை யாரும் தடுக்க முடியாது. எம்ஜிஆர் திமுகவில் இருந்தபோது 60 கூட்டங்கள் நடத்தியுள்ளார். அம்மா முதல்வராவதற்கு முன்பே 10 ஆண்டுகள் கட்சிப் பணி செய்துள்ளார். யார் சொன்ன கருத்தாக இருந்தாலும், சில கருத்துக்கள் ஏற்புடையதாக இருக்காது. சில கருத்துக்கள் ஏற்புடையதாக இருக்கும்.

சமூக நீதிக் கொள்கையை பட்டிதொட்டியிலுள்ள குழந்தைகள் கூட படிக்கும் அளவிற்கு திராவிடத் தலைவர்கள் வளர்ந்துள்ளனர். பெரியாரும் அண்ணாவும் சாதி, மதமெல்லாம் பார்த்ததே இல்லை. எம்ஜிஆரும், அம்மாவும் 68 சதவீதம் இடஒதுக்கீடு கொண்டு வந்தனர். அதை ஒன்பதாவது அட்டவணையிலேயே சேர்த்துவிட்டோம். எந்த மாநிலத்திலும் இது நடைமுறையில் இல்லை.

2026-ல் பாருங்கள். அதிமுக ஒன்றிணைவது குறித்து பொறுத்திருந்து பாருங்கள். அப்படி ஒன்றிணையும்போது, யாரை மக்கள் விரும்புகிறோர்களோ அவர் தான் முதல்வராக இருப்பார். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் இருக்கிறது. உங்களுக்கு தெரியாமல் ஒன்றும் நடக்கப்போவதில்லை. எதுவாக இருந்தாலும் உங்களுக்குத் தெரியவரும்.” என்று அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *