2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும்: எல்.முருகன் | DMK will face a huge defeat in the assembly elections – Union Minister L Murugan

1358690.jpg
Spread the love

நாமக்கல்: “2026-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.” என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

நாமக்கல்லில் தனியார் அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் நமோ இலவச நீட் மற்றும் போட்டித் தேர்வு மையத்தை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல்.முருகன் பார்வையிட்டார். அப்போது அங்கு பயிலும் மாணவ, மாணவியருடன் கலந்துரையாடினார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீட் தேர்வு விவகாரத்தில் திமுக போலி நாடகம் நடத்தி வருகிறது. நீட் தேர்வு மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரும்போது நாமக்கல்லைச் சேர்ந்தவர் தான் திமுகவின் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்தார்.

திமுகவில் பலர் அதிகாரமிக்க மத்திய அமைச்சராக இருந்தனர். அப்போது ஏன் அவர்கள் நீட் தேர்வை எதிர்க்கவில்லை?. வரக்கூடிய 2026-ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக வரலாற்றில் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். அந்த தேர்தலில் திமுக காணாமல் போகும்.

அதிமுக-பாஜக கூட்டணி வலிமையான கூட்டணி. 2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதால் தமிழகத்தின் வளர்ச்சியை தமிழக முதல்வர் கெடுத்துக்கொண்டு இருக்கிறார். தமிழகத்தின் வளர்ச்சிக்காக, முன்னாள் முதலவர் கருணாநிதி உட்பட அனைவரும் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தனர்,” என்று அவர் கூறினார்.

முன்னதாக நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் மத்திய இணையமைச்சர் முருகன் வழிபாடு நடத்தினார். நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜ தலைவர் சரவணன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *