2026 சட்டப்பேரவை தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்: இபிஎஸ் | AIADMK General Secretary EPS press meet in salem

1334629.jpg
Spread the love

மேட்டூர்: 2026 சட்டப்பேரவை தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றும், தமிழகத்தில் மீண்டும் மன்னராட்சியை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

சேலம் எடப்பாடியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது: வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா. மக்களுக்காக வாழ்ந்து மறைந்த தலைவர்கள். திமுக குடும்ப கட்சி, கார்ப்பரேட் கம்பெனியாக மாறிவிட்டது. ‌ குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கொண்ட கட்சி திமுக. திமுகவில் அரசியலிலும் அதிகாரத்திலும் கருணாநிதி குடும்பத்தினர் மட்டும்தான் வர முடியும்.

கருணாநிதி மறைவுக்கு பிறகு ஸ்டாலின் முதலமைச்சரானார். திமுகவில் மூத்த நிர்வாகிகள் பலர் இருந்த போதும் உதயநிதியை துணை முதலமைச்சராக்கி உள்ளனர். ஸ்டாலினுடன் மிசா சிறையில் சித்திரவதை அனுபவதித்த மூத்த நிர்வாகிகள் யாரும் அவர் கண்ணுக்கு தெரியவில்லை. குடும்ப உறுப்பினர்கள் மட்டும்தான் கண்ணுக்கு தெரிகிறார்கள். திமுகவில் உழைப்பவர்களுக்கு மரியாதை கிடையாது.

திமுகவில் மூத்த நிர்வாகிகளுக்கு துணை முதல்வர் பதவி கிடைத்திருந்தால் அக்கட்சியில் ஜனநாயகம் கடைப்பிடிக்கப்பட்டிருக்கும். திமுகவில் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது. திமுகவை வளர்த்த மூத்த அமைச்சர்கள் இருக்கும் போது அவர்களை உதாசீனப்படுத்திவிட்டு உதயநிதியை துணை முதல்வராக்கி உள்ளனர்.

திமுகவில் சர்வாதிகாரம் நிலவுகிறது. திமுகவில் ஸ்டாலின் அரசராகவும், உதயநிதி இளவரசராகவும் இருக்கிறார்கள். தமிழகத்தில் ஸ்டாலினின் கனவு ஒரு போதும் பலிக்காது. இந்தியாவில் மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டு விட்டது. தமிழகத்தில் மீண்டும் மன்னராட்சியை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். வருகின்ற 2026 சட்டப்பேரவை தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல்.

அதிமுகவினர் கொடுத்த அழுத்தம் காரணமாகவே இரண்டரை ஆண்டுகள் கழித்து மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. திமுக சொன்னது எல்லாம் அறிவிப்பு மட்டும்தான், மக்கள் நலனுக்கான திட்டங்கள் அல்ல. தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை இல்லாத இடமே இல்லை. இதை தடுத்து நிறுத்தும் திராணி முதலமைச்சருக்கு இல்லை. போதைப்பொருள் விற்பனையை தடுக்க முதலமைச்சர் ஒன்றுமே செய்யவில்லை.

கஞ்சாவை கட்டுப்படுத்த ஓ.1, ஓ.2, ஓ.3 என முன்னாள் டிஜிபி ஓ…. போட்டு கொண்டே சென்று விட்டார். நாட்டு மக்களை பற்றி கவலை படாமல் வீட்டு மக்களை மட்டுமே நினைக்கிறார் முதல்வர். அதிமுக மூன்றாக போய்விட்டது நான்காக போய்விட்டது என்கிறார் முதல்வர். நாங்கள் தான் அதிமுக, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இதை நிரூபித்து காட்டியுள்ளோம். அதிமுகவின் வலிமையை குறைத்து மதிப்பிட வேண்டாம். அதிமுக பிரிந்து இருப்பதால் ஓட்டு குறையும் என்றார்கள். ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் 1 சதவீதம் கூடுதல் வாக்குகளை அதிமுக பெற்றுள்ளது.

எத்தனை அவதாரங்கள் எடுத்தாலும் ஸ்டாலினால் அதிமுகவை வீழ்த்த முடியாது. திமுக சொந்த கட்சியை நம்பாமல் கூட்டணி கட்சிகளை நம்பி உள்ளது. அதிமுக, சொந்த கட்சியையும் உழைக்கும் நிர்வாகிகளையும் நம்பியே உள்ளது. கூட்டணி இல்லை என்றால் திமுக இல்லை என்கிற நிலைதான் உள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணி, வெற்றி கூட்டணி. 2026 தேர்தல் திமுகவை வீட்டுக்கு அனுப்பி, அதிமுக ஆட்சி அமைக்கின்ற தேர்தல். தேர்தலின் போது அதிமுக நிர்வாகிகள் தேனீக்களை போலவும், எறுப்புகளை போலவும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக மக்களுக்காக தொடங்கி, உழைக்கிற கட்சியாக உள்ளது. தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது நிறைய திட்டங்களை மக்களுக்காக செய்துள்ளோம். அப்படி இருக்கும் போது தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அதிமுகவை எப்படி விமர்சிப்பார்? அவர் விமர்சிக்காதது மற்றவர்களின் ஆதங்கமாக உள்ளது. மேலும் தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் திமுக ஆட்சியில் நடக்கும் ஊழல்கள் குறித்து விசாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுக கூட்டணி பலமாக இருப்பதாக சொல்வது நம்பத்தகுந்ததாக இல்லை. 3 ஆண்டு காலம் எந்த ஒரு போராட்டத்தையும் நடத்தாத திமுக கூட்டணி கட்சிகள், தற்போது ஒவ்வொரு போராட்டமாக அறிவித்து வருகிறார்கள். கூட்டணி ஆட்சி குறித்து காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். இவ்வளவு பிரச்சனைகளை வைத்துக்கொண்டு திமுக கூட்டணி பலமாக இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் பட்டியல் இன மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. திமுக ஆட்சியில் பட்டியல் இன மக்களுக்கு எந்தவித பாதுகாப்பும் கிடையாது. அதிமுகவில் எந்த ஒரு பிளவும் இல்லை. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது பொதுக்குழு உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றி நீக்கப்பட்டுள்ளார்கள். அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு இனிமேல் இடம் கிடையாது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *