2026 தேர்தலில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் திமுகவுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள்: ராமதாஸ் | Ramadoss condemned that Chief Minister Stalin did not want to implement the old pension scheme in Tamil Nadu

1337927.jpg
Spread the love

சென்னை: தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு மனம் வரவில்லை என்றும் 2026 தேர்தலில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் திமுக அரசுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட நிதிசார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைவிரித்து விட்டதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அரசு ஊழியர்களின் துணையுடன் ஆட்சிக்கு வந்த மு.க.ஸ்டாலின் இப்போது அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கூட நடைமுறைப்படுத்த மறுப்பதன் மூலம் உண்மை முகத்தைக் காட்டியுள்ளார்.

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நேற்று முன்நாள் நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் ஆசிரியர்களின் நிதி சாராத கோரிக்கைகளை மட்டும் ஆய்வு செய்ய ஆணையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட நிதி சார்ந்த எந்த கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியாது என்று கூறிவிட்டதாக தெரிகிறது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளும் இதை உறுதி செய்துள்ளனர். தங்களின் வாழ்நாள் முழுவதும் திமுகவை ஆதரித்து வந்த அரசு ஊழியர்களுக்கு இதை விடக் கொடுமையான துரோகத்தை எவராலும் செய்ய முடியாது.

2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் 309 ஆம் வாக்குறுதியாக, ‘‘புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்’’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தேர்தலில் வெற்றி பெற்று மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற உடனேயே அன்றைய நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனைக் கொண்டு தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று அறிவிக்கச் செய்தார். அதற்கு அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், நிதித்துறைக்கு புதிய அமைச்சராக பொறுப்பேற்ற தங்கம் தென்னரசுவைக் கொண்டு பழைய ஓய்வூதியத் திட்டம் அரசின் ஆய்வில் இருப்பதாக அறிவிக்கச் செய்தார். ஆனால், அதன்பின் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

தமிழ்நாடு அரசு நினைத்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று நாளையே அறிவிப்பு வெளியிட முடியும். ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஷ்கார், பஞ்சாப், கர்நாடகம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் அண்மைக்காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது மிகவும் எளிதானது. ஆனால், அதை செய்ய மு.க.ஸ்டாலினுக்கு மனம் வரவில்லை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது முழுக்க முழுக்க மாநில அரசின் உரிமை. இதில் மத்திய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை. ஆனால், 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது வினோதமான வாக்குறுதி ஒன்றை மு.க.ஸ்டாலின் அளித்தார். அதாவது மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். இப்படியாக ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு வகையாக வாக்குறுதி கொடுத்து மக்களையும், அரசு ஊழியர்களையும் ஏமாற்றுவது தான் திமுகவின் வழக்கமாகும்.

மக்களவைத் தேர்தல்களிலும் அரசு ஊழியர்களின் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்று விட்ட நிலையில், இனி ஒன்றரை ஆண்டுகளுக்கு அவர்களின் தயவு தேவையில்லை என்பதால் இப்போது துணிச்சலாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வாய்ப்பில்லை என்று கூறியிருக்கிறார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலின் போது நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று மீண்டும் வாக்குறுதி அளிப்பார் மு.க.ஸ்டாலின். அப்போதும் மீண்டும் ஒருமுறை ஏமாந்து விடாமல் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள் நலன் சார்ந்து திமுக அளித்த வாக்குறுதிகளில் மிகவும் முக்கியமானவை. 1. தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் ( வாக்குறுதி எண்:153). 2. 70 வயதைக் கடந்த ஓய்வூதியர்களுக்கு 10% ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் (வாக்குறுதி எண்:308). 3. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் (வாக்குறுதி எண்:309).

4. சமவேலைக்கு சம ஊதியம் என்ற தத்துவத்தின்படி, ஆசிரியர்களுக்கு இடையிலான ஊதிய முரண்பாடுகள் களையப்படும் (வாக்குறுதி எண்: 311). 5. அங்கன்வாடி பணியாளர்களும், சத்துணவு பணியாளர்களும் அரசு ஊழியர்களாக்கப்படுவார்கள் ( வாக்குறுதி எண்: 313). குறிப்பாக இந்த 5 வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட திராவிட மாடல் அரசு நிறைவேற்றவில்லை.

சிலரை சில முறை ஏமாற்றலாம், பலரை பலமுறை ஏமாற்றலாம். ஆனால், அனைவரையும் அனைத்து முறையும் ஏமாற்ற முடியாது. திமுகவிடம் தொடர்ந்து ஏமாறுவதற்கு ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் ஏமாளிகள் அல்ல. திமுக அரசின் தொழிலாளர் விரோத செயல்பாடுகளுக்கு பழிதீர்க்கும் வகையில் 2026 தேர்தலில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் சரியான பாடம் புகட்டுவார்கள். 2026 ஆம் ஆண்டில் அமையவிருக்கும் பாமக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சியில் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *