“2026 தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முடிவு கட்டப்படும்” – எடப்பாடி பழனிசாமி உறுதி | Family politics will end in the 2026 elections – Edappadi Palanisamy

1357267.jpg
Spread the love

சென்னை: “நீட் தேர்வு விலக்கு அளித்தால்தான் பாஜகவுடன் கூட்டணி என்று அதிமுக அறிவிக்க வேண்டும் என முதல்வர் சொல்கிறார். ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம். அவருக்கு என்ன அவ்வளவு அக்கறை? நீட் தேர்வை கொண்டு வந்தது திமுகதான். 2026 தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முடிவு கட்டப்படும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “கடந்த மார்ச் மாதம் டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும், டாஸ்மாக் நிறுவனத்துக்கு விநியோகம் செய்த மதுபான தயாரிப்பு தொழிற்சாலைகளிலும் 4 நாட்களுக்கு அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. சோதனையில் கிடைத்த ஆவணங்களின்படி ரூ.1,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

அமலாக்கத் துறை சோதனை நடத்தியதை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம், அரசு நிறுவனத்தில் சோதனை நடத்தியது தொடர்பாக ஒரு வழக்கையும், ஊழியர்களை துன்புறுத்தியதாக மற்றொரு வழக்கையும் நீதிமன்றத்தில் தொடுத்தது. மேலும், அமலாக்கத் துறை டாஸ்மாக் தொடர்பாக மேல் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்நிலையில், வழக்கின் ஆரம்பக்கட்ட விசாரணையின் போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் தங்களை விடுவித்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வேறொரு அமர்வுக்கு இந்த வழக்கை மாற்றினார். ஆனால், இவ்வழக்கை எதிர்கொள்ள திராணியில்லாத டாஸ்மாக் நிறுவனம், உச்ச நீதிமன்றத்தை நாடியிருக்கிறது. இந்த வழக்கை வேறு மாநில உயர் நீதிமன்ற விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கோரியிருக்கிறது. இது குறித்து, சட்டப்பேரவையில் பேசுவதற்கு அனுமதி கேட்டோம். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது.

தமிழக அரசின் கீழ் இயங்கும் டாஸ்மாக் நிறுவனத்தின் வழக்கை ஏன் அம்மாநில உயர் நீதிமன்றமே எடுத்து விசாரிக்கk கூடாது? அதை ஏன் வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்? இதன்மூலம் இந்த அரசாங்கம் தவறு செய்திருக்கிறது என்பது நிரூபணமாகி இருக்கிறது. சென்னையில் வழக்கு விசாரணை நடந்தால் மாநில அரசின் தில்லு முல்லுகள் உடனுக்குடன் மக்களுக்கு சென்றுவிடும் என்பதால் இவ்வாறு அரசாங்கம் செயல்படுகிறது. நீதிமன்றங்களில் ஆதாரங்களின் அடிப்படையில் தான் தீர்ப்பு வழங்கப்படும். அப்படியிருக்கையில், இந்த அரசு சார்ந்த நிறுவனம் ஏன் தமிழக நீதிமன்றத்தை அணுகாமல், பயந்து போய் வேறு மாநில நீதிமன்றத்தை அணுகுகிறது? இதுதான் எங்களது கேள்வி.

வேறு மாநிலத்தை அணுகினால், அம்மாநில பிரச்சினைகளை தான் அங்குள்ள ஊடகங்கள் முன்னெடுக்கும். இந்த பிரச்சினையை கண்டுகொள்ள மாட்டார்கள். அதற்குத்தான் இந்த நாடகத்தை தமிழக அரசு நடத்துகிறது. இதில் ஏதோ தவறு இருப்பதால் தான் அரசு பயப்படுகிறது. சட்டப்பேரவையில் இருந்து நாங்கள் வெளியேற்றப்பட்ட போது ‘நொந்து நுலாகி போன அதிமுக தொண்டர்கள் தான் அந்த தியாகிகள்’ என்று முதல்வர் சொல்கிறார். அதிமுக எப்போதுமே நொந்து நுலாகி போனது கிடையாது. நாங்கள் எவ்வளவோ பிரச்சினைகளை சந்தித்து இருக்கிறோம். அவரால் ஒரு பிரச்சினையை சந்திக்க முடியுமா? நான் மட்டுமல்ல அதிமுக தொண்டர்கள் அனைவருமே எதற்கும் அஞ்சியது கிடையாது.

கச்சத்தீவு 1974-ம் ஆண்டு திமுக ஆட்சியில் தான் இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது. இவ்வாறு தமிழகத்துக்கு துரோகம் செய்தது எல்லாம் திமுகதான். ஆனால், அடுத்து வரும் தேர்தலையொட்டி மற்றவர்கள் மீது பலி போட்டுவிட்டு, முதல்வர் தப்பிக்க பார்க்கிறார். 16 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சியில் இருக்கும் போது ஒன்றும் செய்யாமல், ‘தும்பை விட்டு வாலை பிடிக்கும்’ கதையாக திமுக செயல்பட்டு கொண்டிருக்கிறது. பிரச்சினையை உருவாக்குவதும் இவர்கள் தான். அதை திசை திருப்புவதும் இவர்கள் தான்.

நீட் தேர்வு விலக்கு அளித்தால் தான் பாஜகவுடன் கூட்டணி என்று அதிமுக அறிவிக்க வேண்டும் என முதல்வர் சொல்கிறார். ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம். அவருக்கு என்ன அவ்வளவு அக்கறை? நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக தான். 2026 தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முடிவு கட்டப்படும். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, அதிமுக எம்.எல்.ஏ. செங்கோட்டையன் சந்தித்தது என்ன அவ்வளவு பெரிய விஷயமா? அதிமுகவை குறை சொல்வதை விட்டுவிட்டு ஆக்கபூர்வமான பிரச்சினைகளை பேச வேண்டும்,” என்று இபிஎஸ் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *