கோவை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக டெபாசிட் இழக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கணித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று (டிச.21) செய்தியாளர்களிடம் கூறியது: “ஜாபர்சாதிக் வழக்கில் வேகமாக விடை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. திமுக அடிப்படைத் தொண்டனை விட, திமுகவுக்கு அதிகம் வேலை பார்ப்பது சபாநாயகர் அப்பாவு தான். சபாநாயகர் அவருடைய இருக்கைக்கு நடுநிலைமையாக இருக்க வேண்டும்.
பல்கலைக்கழக மானியக் குழு விவகாரத்தில், ஆளுநர் கூறுவது சரிதான். இங்குள்ளவர்கள் ஆளுநரிடம் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனால் ஆறு கல்விக்கூடங்களில் பாதிக்கப்படுவது மாணவர்கள் தான். கல்வியில் இவர்கள் அரசியல் செய்வதால் தான், ஆளுநர் தனது கருத்தை கூறுகிறார். இவ்விவகாரத்தில் அரசியல் செய்யும் அமைச்சரை, சரியான திசையில் ஆளுநர் வழிநடத்துகிறார்.
பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம். அதேசமயம், நீங்கள் தீவிரவாதியை கொண்டாடுவதைத் தான் நாங்கள் தவறு என்கிறோம்.திமுக, காங்கிரஸை விடவா நாங்கள் சமூக நீதியில் பின் தங்கியிருக்கிறோம் என திருமாவளவன் கூறவேண்டும். தற்போதைய சூழலில், திமுக சொல்வதைத் தான் திருமாவளவன் பேச வேண்டும் என்று ஆகி விட்டது.
கோவையில் உயிரிழந்தவரின் இறுதி ஊர்வலத்துக்கு எதற்கு அரசு, காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்து வேடிக்கை பார்த்து நிற்க கூறியது. திமுகவை எதிர்த்து அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தினால் அதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. ஆனால், இங்கு தீவிரவாதிகளை, புதைக்கப்படவில்லை, விதைக்கப்படுகின்றனர் என்று கூறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அது தேசப் பிரிவினைவாதம் இல்லையா?. தேசிய பாதுகாப்புச் சட்டம் அதில் வராதா?.
ஊர்வலம் அமைதியாக நடந்ததா என்பதை சட்டத்துறை அமைச்சர் பார்க்க வேண்டும். இதைத்தான் நாங்கள் எதற்கு இந்த ஒருதலைப்பட்சம் எனக் கேட்கிறோம். ஊர்வலத்தில் எழுப்பப்பட்ட வார்த்தைகளை நாங்கள் கண்டிக்கிறோம். இதற்காகத்தான் அனைத்து இயக்கங்களையும் சேர்த்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். கோவையின் சூழலை கருத்தில் கொண்டு 144 தடைச்சட்டம் உங்களால் போட்டிருக்க முடியாதா? இதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க மாட்டீர்களா? தமிழக அரசியல்வாதிகளில் அனைத்து மதங்களும் சமம் என்று கூறுவது நான் மட்டும்தான்.
தமிழக மக்கள் முதல்வரை நாற்காலியில் இருந்து அகற்றுவதற்கு எல்லா வேலைகளையும் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு பாதிப்பு, லஞ்சம் லாவண்யம் நிலவுவது முதல்வர் கண்ணுக்கு தெரியாதா? ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்டம் எப்படி தமிழக மக்களுக்கு எதிரியாகும். மத்திய அரசு எதைக் கொண்டு வந்தாலும், தமிழகத்துக்கு எதிரி என முதல்வர் கிளப்பி விடுகிறார்.
அமைச்சர் ரகுபதிக்கு காவலர் பயிற்சி வகுப்பில் பயிற்சி கொடுக்க வேண்டும். அமைச்சர் ரகுபதியின் பேச்சை பார்க்கும் போது, அவர் சட்டத் துறை அமைச்சரா, திமுக பேட்டை ரவுடியா என சந்தேகம் எழுகிறது. ரவுடிகள் பேசுவதை சட்டத்துறை அமைச்சர் பேசுகிறார். சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி டெபாசிட் இழக்கும். சுப்பிரமணிய சுவாமிக்கு பிரதமர் மோடியின் மீது இருக்கக்கூடிய காழ்ப்புணர்ச்சி, நாட்டுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியாக மாறக்கூடாது,” என்று அவர் கூறினார்.