புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் வரும் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ரங்கசாமியே முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் உள்ள சட்டப்பேரவையை காகிதமில்லாத சட்டப்பேரவையாக மாற்றும் விதமாக நேவா என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. இதற்காக மத்திய அரசு ரூ.8.16 கோடி நிதி அளித்து 2022-ம் ஆண்டு முதல் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. நேவாவுக்கு மட்டும் இதுவரை ரூ.68 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. இன்றைக்கு நேவா பயிற்சி மையம் மற்றும் சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது. எம்எல்ஏக்கள், சட்டப்பேரவை செயலக ஊழியர்கள், பிற அரசு துறை ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளோம்.
தமிழில் பேசுவதை ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் பேசுவதை தமிழிலும் மொழி பெயர்க்கும் வசதியும் நேவா திட்டத்தில் உள்ளது. விரைவில் பயிற்சி முடித்ததும் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சரை அழைத்து காகிதமில்லா சட்டப்பேரவையை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். குஜராத், பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் காகிதமில்லா சட்டப்பேரவை நடந்து வருகிறது. தமிழகத்திலும் பாதி காகிதமில்லாத சட்டப்பேரவையாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரியில் காகிதமில்லா சட்டப்பேரவையாக மாற்றப்பட்டு வருகிறது.
ரூ.600 கோடியில் புதிய சட்டப்பேரவைக்கான திட்டம் செயல்படுத்த மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. மத்திய அரசு ரூ.500 கோடியை வழங்குவதாக தெரிவித்துள்ளது. மீதமுள்ள ரூ.100 கோடியும் கேட்டு பெறும் வாய்ப்புள்ளது. முன்பணம் எவ்வளவு தருவார்கள் என்பது வரும் 26, 27 ஆகிய தேதிகளில் தெரியவரும். இதற்கான பணியை துணைநிலை ஆளுநர், தலைமை செயலர் உள்ளிட்டோர் மேற்கொண்டுள்ளனர். மார்ச் மாதத்தில் புதுச்சேரிக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். மத்திய அரசிடம் புதுச்சேரி உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான மானியமாக ரூ.3,600 கோடி சிறப்பு நிதியை முதல்வர் கேட்டுள்ளார்.
இது சம்மந்தமாக 26-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் புதுச்சேரி தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள், மத்திய நிதித்துறை செயலர், உள்துறை செயலர்களை சந்தித்து பேச உள்ளனர். நம்முடைய பட்ஜெட்டுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்து ரூ.3,600 கோடி சிறப்பு நிதியாக பெற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் விரைவில் டெல்லி செல்ல உள்ளனர். பிரதமர், மத்திய உள்துறை மற்றும் நிதித்துறை அமைச்சர்களை சந்திக்க விரைவில் முதல்வர் செல்வார். அப்போது அனைத்து எம்எல்ஏக்களும் செல்லும் வாய்ப்பும் உள்ளது.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து நீடிக்கும். இதில் எந்தவித மாற்றமும் இல்லை. வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மீண்டும் முதல்வர் வேட்பாளராக ரங்கசாமி நிறுத்தப்படுவார். வெற்றி பெறுவார். மீண்டும் ஆட்சி அமையும்.முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட காங்கிரஸார் ஆதாரமற்ற குற்றசாட்டுகளை தொடர்ந்து கூறி வருகின்றனர். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் புதுச்சேரியில் எந்த வளர்ச்சித் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.
ஆனால், தற்போது முதியோர், விதைவைப்பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மீனவர்கள் என அனைவரது ஓய்வூதியமும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. வரும் 2029 வரை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இருக்கின்ற வரை மக்கள் மீண்டும் காங்கிரஸ் கட்சியை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.