சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில் வாரிசு அரசியல் மற்றும் குடும்ப ஆட்சி முடிவுக்கு வரும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் கணக்கு வழக்குகளை அமைப்பு செயலாளர் சி.விஜயபாஸ்கர் வாசித்தார். பின்னர் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பேசியதாவது: கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி இன்றி, 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு பெற்றி பெற்ற கட்சி அதிமுக. அதன் பலத்தை கட்சியினர் தெரிந்து கொள்ள வேண்டும்.
சட்டப்பேரவை கூட்டத்தை ஆண்டுக்கு 100 நாட்கள் கூட்டுவோம் என வாக்குறுதி அளித்துவிட்டு, கடந்த 4 ஆண்டுகளில் வெறும் 113 நாட்கள் மட்டுமே கூட்டியுள்ளனர். மழைக்கால கூட்டத்தொடரை 2 நாட்கள் மட்டுமே நடத்தினர். அதில் எதிர்க்கட்சி தலைவரான எனக்கு 10 நிமிடம் மட்டுமே பேச வாய்ப்பளித்தனர். நான் சட்டப்பேரவையில் பேசும்போதெல்லாம் ஒளிபரப்பை துண்டிக்கின்றனர். நான் சட்டப்பேரவையில் பேசுவதை ஒளிபரப்பி இருந்தால், திமுக ஆட்சி இருந்திருக்காது. ஆளும் திமுக அரசுக்கு அதிமுகவை பார்த்து பயம் வந்துவிட்டது.
தமிழகத்தில் 2026 தேர்தலுக்கு இன்னும் 14 மாதங்கள் உள்ளன. அதிமுக ஆட்சி அமைக்க இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைக்கு 30 வயதுக்கு உட்பட்டோரை அதிக அளவில் சேர்க்க வேண்டும். திமுகவை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள். மக்களை பார்க்க திமுகவினர் அஞ்சுகின்றனர். இதை நாம் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
வரும் ஜனவரி மாத இறுதியில் 234 தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இந்த ஆட்சியின் அவலங்களை மக்களிடம் தெரிவிக்க இருக்கிறேன். 2026 தேர்தலில் மக்கள் விரோத ஆட்சி அகற்றப்படும். வாரிசு அரசியல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டப்படும். அந்த தேர்தலில் மக்கள் விரும்பும் கூட்டணி அமையும். இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் துணைப் பொதுச்செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, அமைப்பு செயலாளர்கள் டி.ஜெயக்குமார், செம்மலை, பா.பென்ஜமின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
16 தீர்மானங்கள்: கூட்டத்தில் தீர்மானங்களை ஜெயலிலதா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார், இலக்கிய அணி செயலாளர் வைகை செல்வன் வாசித்தனர். அதன் விவரம்: தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் எதையும் செய்யாத ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.
மேலூர் அருகே டங்ஸ்டன் சுரங்கம் கொண்டுவர மத்திய அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியபோதே, 10 மாதங்கள் அவகாசம் இருந்த நிலையில், அதை தடுக்க தவறிய திமுக அரசுக்கும், நாடாளுமன்றத்தில் சுரங்க சட்டம் கொண்டுவரும்போது போதிய அழுத்தம் கொடுத்து தடுக்க தவறிய திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. மதுரை, மேலூரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.
கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அனைவருக்கும் சமஉரிமை வழங்கும் வகையில் தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். கார் பந்தயம் நடத்துதல், வரைமுறையின்றி சிலைகள் வைத்தல், பூங்காக்கள் அமைத்தல், பேனா நினைவு சின்னம், பல கோடி ரூபாயில் பன்னாட்டு கூட்ட அரங்கம் கட்டுதல் போன்றவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து ஆடம்பர செலவு செய்து, மக்கள் நலனை பின்னுக்கு தள்ளி அரசு நிதியை வீணடிக்கும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.
மாநில உரிமையை பறிக்கும் வகையில் மாநில பட்டியலில் இருந்த கல்வியை, நாட்டில் அவசர நிலை அமலில் இருந்த காலத்தில் பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்கும் வகையில் அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும். தமிழகத்துக்கான நிதிப் பகிர்வை பாரபட்சமின்றி மத்திய அரசு வழங்க வேண்டும்.
கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமியை 2026 சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் தமிழக முதல்வராக்குவோம் என்பன உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.