சென்னை: “தமிழகத்தில் வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும்,” என்று நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுக தேர்தலை சந்தித்தது. தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில், தேமுதிகவுக்கு 5 தொகுதிகள், புதிய தமிழகம், எஸ்டிபிஐ கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு செய்தது. அதிமுக 33 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி தேர்தலை சந்தித்தது. அதிமுக கூட்டணிக்கு புரட்சி பாரதம் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, இந்திய குடியரசு கட்சி, தமிழ் மாநில முஸ்லிம் லீக், மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவளித்துள்ளன.
ஆனால் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை. அதிமுக 7 தொகுதிகளில் டெபாசிட் இழப்பு, 9 தொகுதிகளில் 3-ம் இடம், ஒரு தொகுதியில் 4-ம் இடம் என மோசமான நிலைக்கு சென்றது.எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர்ந்து 10 தேர்தல்களில் அதிமுக தோல்வி முகமாக இருப்பதாக ஓபிஎஸ் தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து மக்களவைத் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் பழனிசாமி புதன்கிழமை முதல் 19-ம் தேதி வரை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசிக்க திட்டமிட்டிருந்தார்.
அதன்படி, இன்று காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொகுதி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், இந்த தேர்தலில் அதிமுக பெற்ற வாக்குகள் குறைவானது ஏன்? சட்டப்பேரவை தொகுதி அளவில் எங்கெங்கு குறைவான வாக்குகள் பதிவாகின? எந்தெந்த நிர்வாகிகள் தேர்தலில் சரியாக வேலை செய்யவில்லை? திமுகவினருடன் கைகோர்த்து, தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக வேலை பார்த்தது யார்? என்பது உள்ளிட்ட கேள்விகளை பழனிசாமி எழுப்பியதாக கூறப்படுகிறது.
இதற்கு பதிலளித்த நிர்வாகிகள், இந்த தேர்தலில் வலுவான கூட்டணி அமையவில்லை. மகளிர் உரிமைத் தொகை, மகளிருக்கான இலவச பேருந்து வசதி போன்ற அரசின் திட்டங்கள்தான் அதிமுக வாக்குசதவீத இழப்புக்கு காரணம். வரும் 2026 தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் எனக் கூறியதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து பழனிசாமி பேசியது: “வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும். அப்பணியை கட்சி தலைமை பார்த்துக் கொள்ளும். அதுகுறித்து நிர்வாகிகள் யாரும் கவலைப்பட வேண்டாம்.
கட்சி நிர்வாகிகள் கிளைக் கழக அளவில் மாதந்தோறும் இருமுறை கூட்டத்தை நடத்தி கட்சியை வலுப்படுத்த வேண்டும். கட்சியில் இளைஞர்களை அதிக அளவில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2026 தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை,” என்று அவர் பேசியதாக கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.