சென்னை: “2026 தேர்தலில் 4 முனை மட்டுமல்ல எத்தனை முனை போட்டி வந்தாலும் திமுக தலைமையிலான கூட்டணிதான் வெற்றி பெறும். 7-வது முறையாக திமுக ஆட்சி அமைக்கும்.” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே களமாவூரில் இன்று (நவ. 10) நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக அரசு மீது எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகளைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அவர்களுக்கு வேறு வேலையும் இல்லை. எஸ்ஐஆர் தேவை என்று பேசி இருக்கிற அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, அது குறித்து நீதிமன்றத்தில் திமுக தாக்கல் செய்துள்ள வழக்கில் ஏன் இணைய வேண்டும்?.
எஸ்ஐஆர் திருத்தம் தொடர்பாக நீதிமன்றம் சென்றுள்ளோம். நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். அதற்குப் பிறகு பாருங்கள். 2026 தேர்தலில் 4 முனை மட்டுமல்ல எத்தனை முனை போட்டிகள் வந்தாலும் திமுக தலைமையிலான கூட்டணிதான் வெற்றி பெறும், 7-வது முறையாக திமுக ஆட்சி அமைக்கும். எதிர்க்கட்சிகளை பலவீனமாகவோ, பலமாகவோ நாங்கள் பார்க்கவில்லை. நாங்கள் எங்கள் வேலையை பார்க்கிறோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.