ஒரு நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது வெறுமனே எத்தனை பேர் இருக்கின்றனர் என்ற எண்ணிக்கையை தெரிந்துகொள்வதற்கு அல்ல.
எத்தனைக் குடும்பங்கள் வறுமையில் இருக்கின்றன, எத்தனை சதவிகித இளைஞர்கள் இருக்கின்றனர், ஊட்டச்சத்து குறைபாட்டால் எத்தனை குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன, குழந்தை பிறப்பு விகிதம் எப்படி இருக்கிறது உள்ளிட்ட பலவற்றை மக்கள்தொகை கணக்கெடுப்பில் கண்டறிந்து, வறுமையில் இருப்போரை மீட்டெடுக்க, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவைக் கொண்டு சேர்க்க, குழந்தை பிறப்பு விகிதத்தை சீரான விகிதத்தில் பராமரிக்கத் தேவையான கொள்கைத் திட்டங்களை உருவாக்க அரசுக்கு இது உதவிகரமாக இருக்கும்.

நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான இத்தகைய காரணிகளை உள்ளடக்கிய மக்கள்தொகை கணக்கெடுப்பு இந்தியாவில் 1951 முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.
கடைசியாக 2011-ல் இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அடுத்து, 2021-ல் நடத்தப்பட வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, கொரோனா பெருந்தொற்று காரணமாக நடத்தப்படவில்லை.