இது குறித்து பாபாசி உறுப்பினர் சங்கர் கோமதிநாயகம், “கடந்த ஆண்டு சுமார் 10 லட்சம் பேர் வந்திருந்தனர். உண்மையான விற்பனை அளவு இன்னும் தீர்மானிக்கப்படாத நிலையில், வைக்கப்பட்டிருந்த 1 கோடி புத்தகங்களில் 40% விற்பனையானதாக கூறப்படுகிறது.
ஒரு புத்தகத்திற்குச் சராசரியாக ரூ.100 என விலை நிர்ணயித்தாலும்கூட, விற்பனை சுமார் 40 கோடி ரூபாயாக இருக்கும். உண்மையான தொகை இதைவிட அதிகமாக இருக்கலாம்” என்றார்.

புத்தகத் திருவிழா குறித்து பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம், “டிஜிட்டல் யுகத்திலும் இவ்வளவு புத்தகங்கள் விற்பனையாகி இருப்பது ஆரோக்கியமான அறிகுறி. அடுத்த ஆண்டு பபாசியின் பொன் விழா என்பதால், சர்வதேசப் பதிப்பகங்களை வரவழைக்கத் திட்டமிட்டுள்ளோம்.
மேலும், புத்தகத் திருட்டு மற்றும் போலிப் பிரதிகளைத் தடுக்க, 2027-ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு இரண்டு முறை புத்தகக் கண்காட்சி நடத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒன்று பதிப்பாளர்களுக்கெனப் பிரத்யேகமாக ஒதுக்கப்படும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.