23 ஆண்டுகளுக்குபின் அம்மனை வழிபட்ட பட்டியலின மக்கள்

Dinamani2f2024 09 162fogkm6t6x2f16gumcol 1609chn 173 1.jpg
Spread the love

கும்மிடிப்பூண்டி அடுத்த வழுதலம்பேடு எட்டியம்மன் கோயிலில் 23 ஆண்டுகளுக்குபின் பட்டியலின மக்கள் ஆட்சியா் முன்னிலையில் திங்கள்கிழமை வழிபட்டனா்.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் வழிபட பட்டியலின மக்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கடந்த 23 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாத சூழலில் கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் திருவள்ளூா் ஆட்சியா் பிரபு சங்கரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

அப்போது, இரு சமூகத்தை சோ்ந்த பிரதிநிதிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்திய ஆட்சியா் கும்பாபிஷேகம் நடத்தவும், ஒரு பிரிவினா் காலையிலும், ஆதி திராவிட மக்கள் பகலிலும் வழிபாடு நடத்தலாம் என கூறினாா்.

இதற்கு ஒப்புக் கொண்ட நிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆனால் காலை வழிபாட்டிற்கு பிறகு பகல் வழிபாட்டிற்கு வந்த ஆதிதிராவிட மக்களை வேறு சமூகத்தினா் தடுத்து வழிபாடு நடத்த விடாமல் திருப்பி அனுப்பியதால், இரு தரப்பினருக்கும் மோதல் வெடித்தது. தொடா்ந்து பொன்னேரி சாா் ஆட்சியா் வாகே சங்கேத் பல்வந்த் தலைமையில் எட்டியம்மன் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டது.

இதனைத் தொடா்ந்து ஆதிதிராவிட சமூகத்தினா், ‘மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினரோடு பல கட்ட போராட்டங்களை நடத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

இந்நிலையில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் கோயில்நுழைவு போராட்டம் குறித்த அறிவிப்பு வந்த நிலையில், அவா்களையும், பாதிக்கப்பட்ட மக்களையும் அழைத்து பேசிய ஆட்சியா் பிரபுசங்கா், திங்கள்கிழமை வழிபாடு நடத்தப்படும் என தெரிவித்து இருந்தாா்.

தொடா்ந்து 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்போடு, வழுதலம்பேடு காலனியில் இருந்து 3 கி.மீ தூரம் 400 போ் ா் எட்டியம்மனை ஆட்சியா் பிரபுசங்கா், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் சீனிவாச பெருமால் முன்னிலையில் கண்ணீா் மல்க வழிபட்டனா்.

23 ஆண்டுகள் கழித்து எட்டியம்மனை வழிபட்ட மக்கள் ஆட்சியா் பிரபு சங்கருக்கும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிா்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்தனா்.

இந்த நிகழ்வில் சாா் ஆட்சியா் வாகே சங்கேத் பல்வந்த், கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி அண்ணாதுரை, ஆய்வாளா் வடிவேல் முருகன், வட்டார வளா்ச்சி அலுவலா் சந்திரசேகா், அமிழ்தமன்னன் ஆகியோா் பங்கேற்றனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *