ஹாத்ரஸ் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் எடா மாவட்டத்தை சேர்ந்த ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபாவின் பேச்சைக் கேட்க கூடிய கூட்டம்தான் அது.
வடமாநிலங்களில் பிரபல ஆன்மிக சொற்பொழிவாளராக அறியப்படும் போலே பாபா, 23 ஆண்டுகளுக்கு முன்பு காவல் துறையால் கைது செய்யப்பட்டவர் என்றால் அதிர்ச்சியாக உள்ளதல்லவா?
சூரஜ் பால் என்னும் நாராயண் சங்கர் ஹரி என்பதே போலே பாபாவின் இயற்பெயர். அவரை பின்தொடர்பவர்களால் போலே பாபா என்று அழைக்கப்படுகிறார்.
23 ஆண்டுகளுக்கு முன்பு வளர்ப்பு மகளை உயிர்த்தெழுப்புவதற்கான மாந்திரீகம் தொடர்பான செயல்களில் ஈடுபட்டதற்காக அவர் கைது செய்யப்பட்டார்.
போதைப் பொருள் மற்றும் மந்திரீக தடுப்புச் சட்டம் 1954-ன் கீழ் 2000ஆம் ஆண்டு ஆக்ராவில் அவர் கைது செய்யப்பட்டார். மயான பூமியில் புதைத்தவர்களைத் தோண்டியதற்காக அவரின் ஆதரவாளர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக பேசிய ஆக்ராவைச் சேர்ந்த ஒருவர், ”சூரஜ் பாலுக்கு குழந்தைகள் இல்லை. அதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த தனது மருமகளைத் தத்தெடுத்து வளர்த்து வந்தார். ஒருநாள் அச்சிறுமி மயங்கி விழுந்தர். போலே பாபா அவரைத் தனது சக்தியால் குணப்படுத்துவார் என்று அவரின் ஆதரவாளர்கள் நம்பினர். அதன்படி சிலமணி நேரங்களில் அச்சிறுமி சுயநினைவுக்குத் திரும்பினார். எனினும் அவர் பின்னர் உயிரிழந்தார்.
அவரின் உடல் மயான பூமிக்கு கொண்டுசெல்லப்பட்டது. எனினும், பாபா இங்கு வந்து சிறுமியை மீண்டும் உயிர்த்தெழச் செய்ய வேண்டும் என அவரைப் பின்தொடர்பவர்கள் பிடிவாதமாக இருந்தனர். மயான பூமியில் உடலைத் தோண்டியெடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டதால் காவல் துறையினர் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.
சூரஜ் பாலுடன் அவரின் ஆதரவாளர்கள் 6 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். எனினும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்” எனக் கூறினார்.
சூரஜ் பாலுக்கு ஆக்ராவில் இல்லம் இருந்ததாகவும், ஆனால் பின்நாள்களில் அதனை அவர் ஆசிரமமாக மாற்றியதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தரப் பிரதேசத்தின் காஸ்கஞ்ச் பகுதிக்கு அவர் குடியேறினார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் – எடா மாவட்டங்களின் எல்லைப் பகுதியான புல்ராய் கிராமத்தில் போலே பாபா தலைமையிலான கூட்டத்தில் நெரிசலால் 121 பேர் இதுவரை உயிரிழந்தனர்.