பகலில் பத்து ரூபாய் கூடுதலாக பாட்டிலுக்கு வசூல் செய்வது, இரவில் 20 ரூபாய் கூடுதலாக வசூல் செய்து மது விற்பனை செய்வது என்று மதுக்கடைகளில் தொடர்ந்து வருகிறது. இதற்கு காரணம் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் பாலாஜிதான்.
கரூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகின்ற அரவக்குறிச்சி, குளித்தலை ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தடையற்ற குடிநீர் வழங்குவதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இப்போது, பொங்கல் பண்டிகையை ஒட்டி டாஸ்மாக் கடையில் எவ்வளவு இலக்கு நிர்ணயம் செய்து மது விற்பனை செய்யலாம் என தமிழக அரசு திட்டம் தீட்டி வருகிறது.
தீபாவளிக்கு ஆயிரம் கோடி இலக்கு நிர்ணயம் செய்து விற்பனை செய்யும் இந்த அரசுக்கு, புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து மக்களுக்காக சேவை செய்ய தி.மு.க அரசால் முடியவில்லை.
கோபாலபுரத்தில் இருந்து ஒரு மன்னர் ஆட்சி நடைபெறுகிறது. அதுபோல, கரூரிலும் ஒரு மன்னர் ஆட்சி நடைபெறுகிறது. இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டுமா, வேண்டாமா? கரு கொண்ட கருவூரில் இப்போது நான் பேசுகின்றேன். தி.மு.க ஆட்சி அகற்றப்பட வேண்டும்.
பணத்தை வைத்து, ஆட்சியைத் தக்க வைத்து விடலாம் என நினைக்கிறார்கள். கரூர் தொகுதியில் வெற்றி பெறுவதற்கு ஒரு ஓட்டுக்கு 5000 ரூபாய் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். ஒரு குடும்பத்திற்கு ஒரு கிராம் தங்கம் வழங்குவதற்கு கரூர் தொகுதி தயாராகி வருகிறது எனத் தகவல்கள் வருகின்றன.
கரூர் தொகுதிக்கு மட்டும் 99 கோடி ஒதுக்கீடு செய்து வைத்திருக்கிறார்கள். அப்படி என்றால் தமிழகம் முழுவதும் தி.மு.க-வினர் எவ்வளவு பணம் வாக்காளர்களுக்கு வழங்க தயாராக வைத்திருக்கிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தமிழகத்தில் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் பணம் நடமாடி வருகிறது. இவையெல்லாம் மக்களின் வரிப்பணத்தில் தி.மு.க-வினர் கொள்ளையடித்த பணம்.
சார் (SIR) என்ற வாக்காளர் திருத்தம் தற்பொழுது தேர்தல் ஆணையத்தால் நடைமுறைப்படுத்தப்படுவதால் தி.மு.க-வுக்குப் பயம் உண்டாகியுள்ளது.
இதற்காக, உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றார்கள். தமிழக அரசின் கீழ் பணியாற்றும் அதிகாரிகள்தான் வாக்காளர் சிறப்பு முகாமை நடத்தி போலி வாக்காளர்களை அகற்றி உள்ளார்கள். இது கூட தெரியாமல் நீக்கப்பட்ட வாக்காளர்கள் குறித்து நிர்வாகிகளை தி.மு.க தலைவர் ஸ்டாலின் நியமித்திருக்கிறார்.