சென்னை: சைபர் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக புதிய செயலிகள உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதன்படி நம்பகத்தன்மையற்ற சீனாவின் ‘ட்ரூ காலர்’ எனும் செயலிக்குப் பதிலாக புதிய செயலியை அரசு உருவாக்கியுள்ளது. இதன் மூலம் சைபர் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
நாடு முழுவதும் செல்போன் மூலம் நடத்தப்படும் சைபர் தாக்குதல்கள் கடுமையாக இருந்தாலும் பெரும்பாலான குற்றங்கள் காவல்துறையின் கவனத்துக்கு கூட வருவதில்லை. பாலியல் ரீதி யான துன்புறுத்தல்கள் உட்பட சைபர் தாக்குதலில் மாட்டிக் கொண்டதை பலர் வெளியே சொல்லாததே இதற்கு காரணம். இதுகுறித்து தேசிய இணைய பாதுகாப்பு ஆராய்ச்சிக் கவுன்சில் (என்.சி.எஸ்.ஆர்.சி) இயக்குநர் இ.காளிராஜ் கூறியதாவது:
டிஜிட்டல் மூலமாக பணம் பறிப்பு, பாலியல் துன்புறுத்தல்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், சட்ட விரோத பணப் பரிமாற்றம், போதைப் பொருட்களின் பார்சல் வந்திருப்பதாகக் கூறி நூதன மோசடி உட்பட 24 வகையான சைபர் குற்றங்களை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. இத்தகைய தாக்குதலுக்கு ஆளாகும்போது National Cyber Crime Reporting Portal-ல் அல்லது 1930 என்ற எண்ணில் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும்.
இந்த போர்ட்டலில் 24 வகையான சைபர் குற்றங்களின் தன்மை விரிவாக விளக்கப்பட்டுள்ளது. மின்னணு வர்த்தகம் செய்யும் நிறுவனங்களில் இருந்து உங்கள் வாட்ஸ் அப்புக்கு லிங்க் வரும், அவை பெரும்பாலும் போலியானவை. உடனே அதை கிளிக் செய்து உள்ளே போய்விட்டால் உங்களது அனைத்து விவரங்களும் சைபர் கிரிமினல்கள் கைக்குப் போய்விடும். அதில் கவனமாக இருக்க வேண்டும்.
உங்களது செல்போன் தொலைந்துவிட்டால் அதை எடுத்து யாரும் தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதற்கு மத்திய அரசின் Central Equipment Identity Register – CIER என்ற போர்ட்டலில் உங்களது செல்போன் ஐஇஎம்ஐ எண்ணை உடனே பதிவு செய்ய வேண்டும். அதையடுத்து அந்த நம்பர் தீவிரமாக கண்காணிக்கப்படும். யாராவது தவறாக பயன்படுத்துவதும் தடுக்கப்படும்.
அதுபோல மத்திய தொலைத் தொடர்புத் துறையின் மற்றொரு போர்ட்டலான sanchar saathi.gov.in-ல் உங்களது ஆதார் எண்ணைப் பதிவு செய்தால் உங்களது பெயரில் எத்தனை ‘சிம்’ கார்டுகள் உள்ளன. அவற்றின் தற்போதைய நிலை என்ன என்று தெரிந்து கொள்ளலாம். அதில் தேவையில்லாத ‘சிம்’கார்டுகளை செயலிழக்கச் செய்ய வேண்டுமானால் அது குறித்து மேற்கண்ட போர்ட்டலில் பதிவிட வேண்டும். அடுத்த ஒரு வாரத்துக்குள் செயலிழக்கச் செய்யப்படும்.
சீனாவைச் சேர்ந்த `ட்ரூ காலர்’ எனும் செயலியில் இடும் பதிவுகள் அனைவராலும் பார்க்கும் வகையில் உள்ளது. அது மிகவும் ஆபத்தானது. இதிலிருந்து மக்களைப் பாதுகாக்க மத்திய அரசு, Introduction of Calling Name Presentation – CNAP என்ற செயலியை மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தி வருகிறது. விரைவில் நாடு முழுவதும் பயன்பாட்டுக்கு வரும் இந்த செயலியைப் பயன்படுத்தனால் போலி அழைப்புகளிலிருந்து நிச்சயம் தப்பிக்கலாம். இவ்வாறு காளிராஜ் தெரிவித்தார்.