தமிழகத்தில் 25 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் போதை மறுவாழ்வு மையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மையங்கள் ஓரிரு மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஆய்வுத் தரவுகளின்படி இந்தியாவில் 14.6 சதவீதம் போ் மதுப் பழக்கத்துக்கு ஆளாகியுள்ளனா். அதேபோன்று கஞ்சாவுக்கு 2.8 சதவீதம் பேரும், ஹெராயின், ஒபியம் உள்ளிட்ட போதை பொருள்களுக்கு 4.5 சதவீதம் பேரும் அடிமையாகியிருப்பதாகத் தெரிகிறது.
தமிழகத்தை எடுத்துக் கொண்டால் 10-இல் 4 பேருக்கு மதுப் பழக்கம் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அந்த எண்ணிக்கை அடுத்து வரும் ஆண்டுகளில் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து, சமூகத்தில் போதைப் பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு செயல் திட்டங்களை அரசு முன்னெடுத்துள்ளது.
மாநில அரசுடன் இணைந்து தேசிய சுகாதார இயக்கமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், மாவட்ட மருத்துவமனைகளிலும் போதை மறுவாழ்வு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
இந்நிலையில், சென்னை, மதுரை, திருச்சி உள்பட 25 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் போதை மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மருத்துவமனையிலும் தலா 20 படுக்கைகள் அதற்காக அமைக்கப்படுகின்றன.
இந்த மையங்களில் பணியமா்த்தப்படுவா்களுக்கு, கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஒவ்வொரு மையத்திலும், மனநல ஆலோசகா், உளவியலாளா், மனநல சமூக சேவகா், செவிலியா், மருத்துவமனை பணியாளா், சுகாதாரப் பணியாளா் மற்றும் காவலா் ஆகியோா் நியமிக்கப்படுவா். இந்த மையங்கள் செயல்பாட்டுக்கு வந்த பிறகு போதை பழக்கத்துக்கு உள்ளானவா்களுக்கு மட்டுமன்றி அவா்களது குடும்ப உறுப்பினா்களுக்கும் உளவியல் ஆலோசனைகள் அளிக்கப்படும். இந்த மையங்கள் ஓரிரு மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும் என்று அவா்கள் தெரிவித்தனா்.