ஏர் இந்தியா நுழைவு வாயிலில் இளைஞர்கள் குவிந்த காணொலியை பகிர்ந்த காங்கிரஸ் எம்பி வர்ஷா கெய்க்வாட் கூறியதாவது:
“மும்பையைப் பற்றிச் சொல்லும்போது, இங்கிருந்து யாரும் வெறுங்கையுடன் செல்வதில்லை, அனைவருக்கும் இங்கே பிழைக்க ஏதாவது வேலை கிடைக்கிறது என்று. ஆனால் மும்பையிலேயே வேலையில்லாத் திண்டாட்டத்தின் நிலையைப் பாருங்கள்.
600 சுமை தூங்கும் பணிகளுக்கு 25,000 பேர் குவிந்ததால் ஏர் இந்தியா ஊழியர்களால் நிலைமையை சமாளிக்க முடியவில்லை. உணவும், குடிநீருமின்றி இளைஞர்கள் குவிந்துள்ளனர்.
கடந்த பத்தாண்டுகளில் நாட்டின் இளைஞர்களின் நிலைமை மிகவும் மோசமாக்கியுள்ளது. போர் நடைபெறும் ரஷியா, உக்ரைனில்கூட வேலை செய்யத் தயாராக உள்ளனர்.
வேலை தேடும் இளைஞர்களை பக்கோடா போடவும், பஞ்சர் கடையை திறக்கவும் என்று உணர்வற்ற கருத்துகளை தெரிவிக்கின்றனர். இளைஞர்களின் துன்பங்களை பாஜக தலைவர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள்.
அரசின் ஒவ்வொரு துறைகளிலும் நூற்றுக்கணக்கான வேலைகள் இருந்தும், தேர்வு நடத்தப்படுவதில்லை, நடத்தினால் முறைகேடு நடக்கிறது. அல்லது, அவர்களின் நண்பர்களுக்கு ஒப்பந்த தொழிலாக வழங்கப்படுகிறது. மகாராஷ்டிரத்துக்கு வரும் தொழிலை குஜராத்துக்கு மத்திய அரசு மாற்றுகிறது.
மத்திய பாஜக அரசும், மாநில அரசும் நாட்டின் பொருளாதார தலைநகருக்கு என்ன செய்தது? இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தேவை, வெற்று வாக்குறுதிகள் மற்றும் பொய்யான புள்ளிவிவரங்கள் அல்ல. நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்தில் இந்த அரசு எப்போது தீவிரம் காட்டும்?” எனத் தெரிவித்துள்ளார்.