3 நாட்களில் ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை: சாராயம் விற்பதில் திராவிட மாடல் சாதனை – அன்புமணி | Anbumani Ramadoss slams DMK government for TASMAC sale achievement

1380509
Spread the love

சென்னை: “தமிழகத்தில் தீபாவளி திருநாளையொட்டி, 3 நாள்களில் மொத்தம் ரூ.789.85 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது வணிகம் நடைபெற்றிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் வருத்தமும், வேதனையும் அளிக்கின்றன. அடுத்து பாமக ஆதரவுடன் அமையவுள்ள ஆட்சியில் மது விலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று உறுதியளிக்கிறேன்.” என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் தீபாவளி திருநாளையொட்டி, 3 நாள்களில் மொத்தம் ரூ.789.85 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது வணிகம் நடைபெற்றிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் வருத்தமும், வேதனையும் அளிக்கின்றன. கொண்டாட்டங்கள் என்றாலே மது அருந்துவது தான் என்ற நிலைக்கு தமிழ்நாட்டு மக்களை திராவிட மாடல் அரசு சீரழித்து வைத்திருக்கிறது என்பதற்கு மிக மோசமான எடுத்துக்காட்டு தான் இதுவாகும்.

தீபாவளித் திருநாளுக்கு இரு நாள்கள் முன்பாக கடந்த 18-ஆம் தேதி ரூ.230.06 கோடி, அதற்கு அடுத்த நாள் 19-ஆம் தேதி ரூ.293.73 கோடி, தீபாவளி நாளில் ரூ.266.06 கோடி என மொத்தம் 3 நாள்களில் ரூ.789.85 கோடிக்கு மது விற்பனையாகியிருக்கிறது. இதில் சென்னை மண்டலம் ரூ.158.25 கோடி, திருச்சி மண்டலம் ரூ. 157.31 கோடி, சேலம் மண்டலம் ரூ.153.34 கோடி, மதுரை மண்டலம் ரூ.170.64 கோடி, கோவை மண்டலம் ரூ.150.31 கோடி என்ற அளவில் பங்களித்திருக்கின்றன.

தமிழ்நாட்டில் சம்பந்தப்பட்ட 3 நாள்களில் பெய்த மழையை விட, மது மழை மிக அதிகம் என்பதையே இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. தமிழ்நாட்டில் பெண்களின் வாழ்வை முன்னேற்றுவதற்கான திட்டம் என்று போற்றப்படும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டு குடும்பங்களுக்கு வழங்கப்படும் தொகை ரூ.13,000 கோடி, அதாவது ஒரு நாளைக்கு ரூ. 35.61 கோடி. 3 நாள்களுக்கு கணக்கிட்டால் ரூ.106.86 கோடி.

ஏழைக் குடும்பங்களை உருவாக்குவதற்காக தமிழ்நாடு அரசு ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கும் தொகையை விட, 7.39 மடங்கு அதிக தொகையை மது வணிகம் என்ற பெயரில் ஏழைக் குடும்பங்களிடமிருந்து பறித்துக் கொள்கிறது. இவ்வாறு மதுவைக் கொடுத்து மக்களிடமிருந்து பணத்தைப் பறித்தால் ஏழைக் குடும்பங்கள் எங்கிருந்து முன்னேறும்?

ஒன்று மட்டும் உறுதி…. தமிழ்நாட்டின் வருவாயை ஆக்கப்பூர்வமான வழிகளில் முன்னேற்றுவதற்கான எந்த திட்டமும் திமுக அரசிடம் இல்லை. அதனால் தான் மதுவைக் கொடுத்து மக்களை அழிக்கும் ஆபத்தான திட்டத்தைக் கட்டிக்கொண்டு அழுகிறது. மதுவை ஒழித்து மக்களைக் காக்கும் அறத்தை திராவிட மாடல் அரசிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. இன்னும் 4 மாதங்களில் திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதப்படும் நிலையில், அடுத்து பா.ம.க. ஆதரவுடன் அமையவுள்ள ஆட்சியில் மது விலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று உறுதியளிக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *